ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரு இந்தியர்கள் : தமிழர் பகுதியில் ஒருவர் கைது
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பை பேணிய இரண்டு இந்தியர்களுடன தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவர் மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய தரப்பினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய அவர், இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சிற்றூர்ந்து வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது குறித்த சிற்றூர்ந்தை செலுத்தியவர் என கூறப்படும் ஒருவர் உயிரிழந்தார்.
இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர்
இந்த வெடி விபத்தை அடுத்து, விசாரணை நடத்திய இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் தாக்குதல் ஒன்றுக்கு தயாரான நிலையில் இந்த வெடி விபத்து இடம்பெற்றதாக கண்டறிந்தனர். இதனையடுத்து அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பலர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கேரளாவின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாருதீன் என்பவரிடமும் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அவர், கோயம்புத்தூரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அடிக்கடி சென்றிருந்தவர் என்றும் அங்கிருந்தே அவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டினார் என்றும் இந்திய புலனாய்வு பிரிவு கண்டறிந்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ்
அத்துடன் அவர், இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான பங்காளரான சஹ்ரான் ஹாஷிமை பின்தொடர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது. சஹ்ரான் ஹாஷிமும் பல சந்தர்ப்பங்களில் தமிழகத்துக்கு சென்று வந்தமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
இந்த தொடர்புகளின் அடிப்படையிலேயே இலங்கை இருந்து செயற்பட்டு வந்த பிரிவினருடன் தமிழகத்தில் செயற்பாட்டை கொண்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரின் வலைபின்னல் கண்டறியப்பட்டது.
இந்த வலைப்பின்னல் அடிப்படையிலேயே காத்தான்குடியில் நேற்றிரவு 30 வயதான ஒருவர்
கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பேஸ்புக் ஊடாக தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினருடன்
தொடர்பை பேணியமை தெரியவந்துள்ளது.