இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ள கர்தினால் (VIDEO)
ஆசியாவின் ஆச்சரியம் இதுவா என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நத்தார் தினமன்று மதுபானம் விற்பனை செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சினால் அனுமதி பெற்றுக்கொண்ட ஹோட்டல்களுக்கு அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
நல்லது தானே? நத்தாருக்கு குடித்து குடித்து சாக வேண்டியது தான். இதுவா ஆசியாவின் ஆச்சரியமா? இதுவா சுபீட்சத்தின் நோக்கு? நத்தார் பண்டிகையை இழிவுபடுத்துகின்றனர்.
சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர். வெசாக் பௌர்ணமிக்கு மதுபான விற்பனை தடையென்றால் நத்தார் பண்டிகையிலும் தடை செய்ய வேண்டுமு; என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றே தெரிகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணைக் குழுவில் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரையில் எவரிடமும் விசாரணை செய்யப்படவில்லை. நாடகம் நடிக்கப்படுகின்றது.
எந்தவொரு அரசியல் தலைவரும் மத கொள்கைகளை விடவும் உயர்ந்தவர்கள் கிடையாது என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதேவேளை,மதம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலுக்கு இரையாகிவிடக் கூடாது.மதத் தலைமைகள் எப்போதும் சுயாதீனமாக இருக்க வேண்டுமே தவிர மத கொள்கைகளை அரசியலுக்காக விட்டுக் கொடுத்துவிட கூடாது.
மதத் தலைவர்களினால் அரசியல் கட்சி தலைவர்களாக மாறிவிட முடியாது.மதத் தலைவர்கள் முழுமையாக அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களது அபிலாஷைகளுக்காக மத தலைவர்களை பயன்படுத்திக் கொள்வது மதங்களுக்கு செய்யும் மாபெரும் இழிவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனவும், அரசியல் மற்றும் மத தலைவர்கள் அவர்களை கைவிட்டுவிட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு மத நம்பிக்கையாளர்களும் தங்களது மதக் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri