ஈஸ்டர் ஞாயிறு அறிக்கையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்த முயற்சிகின்றதா? – முஜிபுர் ரஹ்மான்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை தற்போதைய அரசாங்கம் அரசியல்மயப்படுத்த முயற்சிக்கின்றதா என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களில் உயிருடன் இருக்கும் ஒரேயொரு தற்கொலைப் போராளியான சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பெண் தப்பிச் செல்வதற்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், இந்த தாக்குதல் பற்றிய அனைத்து விடயங்களையும் தெரிந்த ஒருவராக சாராவை கருத வேண்டும்.
சாராவை இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கொண்டு வருவதனை தடுக்கும் முயற்சியாகவா இந்த ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.




