மத்திய அரசு செய்வது நியாயமா? இரா.துரைரத்தினம் கேள்வி
மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த மதகுருவினால் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை மத்திய அரசு பார்வையாளராக இருந்து பார்க்கப் போகின்றதா, இது நியாயமா என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் (R.Durairatnam) கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இதற்கு பிரதேச செயலாளர், உதவிப்பிரதேச செயலாளர் ஏனைய திட்டமிடல் பிரிவு கிராம சேவையாளர்கள் ஏனைய அனைத்து பிரிவுகளைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் சிறப்பான செயற்பாடே காரணமாகும்.
இப்பிரதேச செயலகத்தைப் பொறுத்தவரையில் பௌத்த மத குருவினால் பல தடவைகள் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்களை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக பௌத்த மத குரு முறைமைக்கு மாறாக இவ் அச்சுறுத்தல் செய்து வருவது அரச நிர்வாகத்தை சிறப்பாக செயற்படாமல் தடுப்பதற்கான செயற்பாடாகும்.
இப்பிரதேச மக்களைப் பொறுத்த வரையில் பௌத்த மதகுருவிற்கு எதிரானவர்கள் அல்ல. இம் மக்கள், உத்தியோகத்தர்கள் இம் மத குருவின் செயற்பாடுகளை வெறுகிக்கின்றனர்.
இம் மதகுருவின் செயற்பாட்டால் இப் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களும், இப்பிரதேச மக்களும் விரக்தி அடைகின்றனர்.
எனவே பௌத்த சாசன அமைச்சு இவரை இடமாற்றம் செய்வதோடு இவருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் இதுவரை சிறப்பாக செயற்பட்டு கொண்டு வரும் அரச உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக செயற்பாடுகளில் நலிவடைந்து போவார்கள்.
எனவே இவரின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதோடு விரைவாக இவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இப் பிரதேச மக்களும் இப்பிரதேச உத்தியோகத்தர்களும் ஒரு முடிவிற்கு வரவேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
