முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பற்ற நடத்தை: மக்கள் குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் தனியார் வைத்தியசாலைகளை நாடிச் செல்லும் மக்கள் மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பற்ற நடத்தை தொடர்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிலாவத்தையில் நேற்றைய தினம் (25.03.2024) தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் பெண்ணொருவர் சிகிச்சை பெருவதற்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் காயமடைந்த பெண் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பொறுப்பற்ற நடத்தை
இதன்போது காயத்திலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தமையினால் அவர் அங்கிருந்து வெளியேறி தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதுடன் அங்கு உரிய சிகிச்சை அளி்க்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை வைத்தியசாலையை விட்டு வெளியேற முயன்றவர்களிடம் "அவர்களுக்கு என்ன நடந்தாலும் அவர்களே பொறுப்பாளிகள்" என எழுதித் தந்து விட்டுச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த பெண்ணும் அவ்வாறு எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறியதாக காயம் பட்டவரை கூட்டிச் சென்றிருந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
மாஞ்சோலை வைத்தியசாலையின் பொறுப்பற்ற நடத்தையினால் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைக்கு செல்ல தூண்டப்பட்டுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தனியார் வைத்தியசாலையில் விரைவாக வழங்கப்படும் சிகிச்சையினை ஏன் அரசாங்க வைத்தியசாலையினால் வழங்க முடியவில்லை என தனியார் மருத்துவமனைக்கு செல்வோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.