மட்டக்களப்பில் மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடு - ஈ.பி.டி.பி மட்டு. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சாரம், குடிநீர், மாநகரசபை ஆகிய மூன்று அரச திணைக்களங்களில் முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது, எனவே சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் தலையீடு செய்து அதனை நிறுத்த வேண்டும் என ஈ.பி.டி.பியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டு பாலைமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று (09.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண நிலுவைக்கான மின்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மட்டுமே அக்குத்தகைக்காரர்களுக்கு 800 ரூபாய் பணம் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை சாதகமாக்கிக் கொண்டு சிலர் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலி குறுஞ்செய்தி
வீடுகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில், மின்சாரத்தைத் துண்டிக்காமலேயே 'துண்டிக்கப்பட்டு விட்டது' என போலியாக வீட்டின் உரிமையாளர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு குறும் செய்திகளை அனுப்பி 800 ரூபாயை அவர்கள் மோசடி செய்து வருகின்றனர். அதேவேளை ஆங்கிலத்தில் வரும் குறுஞ் செய்திகளை (SMS) புரிந்து கொள்ள முடியாத முதியவர்களை குறிவைத்து இப் பணச் சூறையாடல் நடக்கிறது.
எனவே மின்சார விநியோகப் பொறியியலாளர் உடனடியாக விசாரணை செய்து இந்த முறைகேட்டை நிறுத்த வேண்டும். இரண்டாவதாக நீர் வழங்கல் சபையின் அலட்சியமும் பொதுமக்களுக்கான அலைக்கழிப்பு நிலுவைக் கட்டணம் காரணமாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் நிலுவை பணத்தை வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் செலுத்துகின்றனர்.
கட்டணத்தைச் செலுத்திய பின்னர், தொலைபேசி வாயிலாக நீர் வழங்கல் சபையினரை தொடர்புகொண்டு விபரங்களைக் கூறினாலும் அதிகாரிகள் அதனை ஏற்பதில்லை. மாறாக, கட்டணம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டுடன் (Receipt) இருதயபுரத்தில் உள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை நிலையத்திற்கு பொதுமக்களை நேரில் வருமாறு வற்புறுத்துகின்றனர்.

பொருளாதார நெருக்கடி
ஆன்லைன் (Online) மூலம் கட்டணத்தைச் சரிபார்க்கும் வசதி இருக்கும் போது, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழும் மக்களை மேலதிக எரிபொருள் செலவுகளுடன் நேரில் வரவழைத்து அலைக்கழிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தொலைபேசி அழைப்பின் மூலம் இந்த சேவையை மீள வழங்க நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். மட்டக்களப்பு மாநகரசபையின் முறையற்ற நிர்வாகமும் டெங்கு அச்சுறுத்தலும் மட்டக்களப்பு மாநகரப் பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மாநகரசபையின் முறையற்ற திண்மக்கழிவு அகற்றலே முதன்மைக் காரணமாகும்.
வீதிகளில் பிளாஸ்டிக் போத்தல்களும் குப்பைகளும் நிறைந்து காணப்படுவதுடன், வடிகான்கள் முறையாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. குப்பைகளை அகற்றுவதற்கு வாகனப் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறும் மாநகர சபை, போக்குவரத்து அமைச்சரிடம் மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு புதிய பேருந்துகளை வாங்குவதற்கும் அனுமதிப் பத்திரங்களை பெறுவதற்கும் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்துகிறது. குப்பை அகற்றும் வாகனங்கள் வாங்குவதை விடுத்து, ஆடம்பரப் பேருந்துகளை வாங்குவது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
அதேவேளை தேர்தல் காலத்தில் உங்களுக்குச் சம்பளம் தேவையில்லை என்று கூறி வென்ற வட்டார உறுப்பினர்கள், தற்போது சம்பளத்தைப் பெற்று கொண்டு மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். எனவே அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்தே வழங்கப்படுகிறது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். என்பதுடன் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தேர்தல் காலங்களில் போலியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடிய, ஆளுமைமிக்க தலைவர்களை எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.