ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம்
கடந்த ஜூலை 9 அம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாம் ஜமால்டீன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று(25) அழைக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க, ஆணையாளர் அனுசுயா சண்முகநாதன் ஆகியோர் முன்னிலையில் நிசாம் ஜமால்டீனுக்கான விசாரணை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் தரப்பினரின் கோரிக்கை

இந்த சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று வாக்குமூலம் வழங்கினால் அவரது பிரதிவாதி தரப்பு அறிக்கைக்கு பாதிப்பு ஏற்படுமென தாம் கருதுவதாக ஜமால்தீனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதனால் இன்றைய தினம் வாக்குமூலம் வழங்க வேண்டாம் என தாம் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம்

எனினும் அதனை ஆணைக்குழு நிராகரித்ததுடன் நிசாம் ஜமால்டீன் கருத்து தெரிவிக்கவில்லையாயின் ஊடகவியலாளர்களுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிப்பதற்கு விடயங்கள் இல்லையென கருதி தீர்ப்பு வழங்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி ஆணைக்குழு முன்னிலையில்
முன்னிலையாகுமாறு நிசாம் ஜமால்டீனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.