ராஜிதவுக்கு எதிராக விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் மீன்பிடி அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு, மோதர மீன்பிடி துறைமுகம் தொடர்பான வழக்கு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படும் செயற்பாடுகளை செய்ததாக கூறி குற்றம் சுமத்தப்பட்ட ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிரான சாட்சியங்களை விசாரணை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதே, ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய பிரதிவாதிகளான துறைமுக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே மற்றும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல் ரவீந்திர முனசிங்க நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
நீதிபதி உத்தரவு
இதன்போது 2016 ஆம் ஆண்டு அரச கண்காணிப்பாளர்கள் வழங்கிய தணிக்கை அறிக்கையின் இரண்டு பக்கங்கள் மாத்திரம் அரசாங்கத் தரப்பினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வழக்கில், அடிப்படை உண்மைகளை சாட்சியமாக வழங்கியுள்ளதால், தரப்பினர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, மீதமுள்ள பக்கங்கள் உட்பட முழுமையான அறிக்கையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |