மைத்திரி வெளியிட்ட தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (maithripala sirisena) வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணை நடத்துமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெளிப்பாடு தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை மே 10ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் லோச்சனி அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய வெளிப்படுத்தல் தொடர்பில் நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன ஏப்ரல் 03ஆம் திகதி தனது சட்டத்தரணி ஊடாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இரகசிய வாக்குமூலம்
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றப்புலனாய்வு துறையினரிடம் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதால், அது குறித்து இரகசிய அறிக்கையை நீதிமன்றில் வெளியிட விரும்பவில்லை என சிறிசேன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களை தமக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி கண்டியில் வைத்து அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நீதிமன்றம் ஒன்றில் இரகசிய வாக்குமூலம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் காவல் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதன் பின்னரே குற்றப்புலனாய்வு துறையினர் அவரிடம் வாக்குமூலத்தை பெற்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |