டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான முக்கிய விசாரணை! அம்பலமாகும் சர்ச்சைகள்
சுனாமியால் இடம்பெயர்ந்த வடக்கு - கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட RADA நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி விசாரணை தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
வடக்கு - கிழக்கு புனரமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (RADA) என நிறுவப்பட்ட பின்னணியில் அங்கு இடம்பெற்ற பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் குறித்த செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமியால் இடம்பெயர்ந்த வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்காக "ஜெயலங்கா" என்ற அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வீடுகளை கட்டுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (RADA) நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது.
சாலிய விக்ரமசூரிய
இதன்படி RADAவின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ், RADAவின் முன்னாள் தலைமை இயக்க அதிகாரி சாலிய விக்ரமசூரிய, RADAவின் முன்னாள் கணக்காளர் ஜெயந்த டயஸ் சமரசிங்க மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் அந்தோணி எமில் காந்தன் ஆகியோருக்கு எதிராக பொது சொத்துச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
அந்த நிறுவனம் எந்த வீடுகளையும் கட்டாமல் ரூ. 124 மில்லியன் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குறித்த வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ராடாவை நிறுவியதன் முதன்மையான நோக்கம், சுனாமியால் அழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் வீடுகளை மீண்டும் கட்டுவதாகும்.
இருப்பினும், 1,200 வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கிய போதிலும், அதில் இடம்பெற்ற பாரிய மோசடி விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்படி, அந்தப் பணத்தில் ஒரு பகுதி டிரான் அலஸின் பைகளுக்கு சென்றதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அப்போது கேள்வி எழுந்தது.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற மகிந்த ராஜபக்சவால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு(வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கப்பட்ட தரப்புக்கு) பணம் கொடுக்கப்பட்டது என்பதை டிரான் அலஸ் உறுதிப்படுத்தினார்.
2005 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய எவருடனும் பசில் ராஜபக்சவை சந்திக்குமாறு மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில் டிரான் அலஸைக் கேட்டுக்கொண்டார்.
பசில் ராஜபக்ச
அதன்படி, டிரானின் நண்பரான எமில் காந்தனுக்கும் மகிந்தவின் சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே ஒரு சந்திப்பை டிரான் அலஸ் ஏற்பாடு செய்தார் என்பபை குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.
2005 ஆம் ஆண்டு மகிந்தவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத் தலைவரான பசிலுக்கும், எமில் காந்தனுக்கும் இடையிலான சந்திப்பு, டிரான் அலஸின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
அந்த நேரத்தில், பசில் ராஜபக்ச, தனது சகோதரரும் அப்போதைய பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் வெற்றியைப் பெறுவதற்காக, தேர்தலைப் புறக்கணிப்பதில் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை வழிநடத்துமாறு எமில்காந்தனிடம் முன்மொழிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணமும் படகுகளும் தேவை என்று எமில் காந்தன் பசிலிடம் தெரிவித்ததாகவும், அதன்படி, ஜனவரி 22, 2010 அன்று தனது வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், டிரான் அலஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், எமில் காந்தனுக்கு ஆரம்பத்தில் பெரிய அளவிலான பணம் பெரிய பயணப் பைகளில் முன்பணமாக வழங்கப்பட்டதாக வெளிப்படுத்தினார்.
ராடா நிறுவப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, டிசம்பர் 30, 2005 அன்று, டிரான் அலஸ் மற்றும் சாலிய விக்கிரமசூரிய, எமில் காந்தனுடன் சேர்ந்து, கிளிநொச்சிக்குச் சென்று, கிளிநொச்சி பிராந்தியத் தலைவரான 'புவண்ணன் இனியவன்' உடன் கலந்துரையாதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் இனியவனுடன் சேர்ந்து, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான பெயர் பட்டியலைக் கோரியதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வீடுகளை கட்டுவதற்கான ஒப்பந்தம்
அந்த நபர்களுக்கு வீடுகளை கட்டுவதற்கான ஒப்பந்ததாரரைத் தேர்ந்தெடுப்பது, அரசாங்க நடைமுறைக்கு வெளியே, பிராந்தியத் தலைவர் புவண்ணன் இனியவன் மற்றும் ராடா தலைவர் டிரான் அலஸ் ஆகியோரால் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பில் 400 வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தமும் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறர். போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஒரு வீடு கூட கட்டாமல் 9 காசோலைகளிலிருந்து சுமார் 125 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளமை அப்போதைய விசாரணைகளில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதற்காக, பிரதேச செயலாளர்களின் கையொப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் பலவந்தமாகப் பெறப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய அறிக்கைகளில்,
டிரான் அலஸின் அரசியல் செல்வாக்கு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி, பிரதேச செயலாளர்கள் தொடர்புடைய கையொப்பங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிடுகின்றன என்பதை குறித்த ஊடகம் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூன் 2006 நிலவரப்படி, ராடா மீது எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அரசாங்க சொத்துக்கள் மற்றும் நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




