இலங்கையின் தேசிய அடையாள அட்டையில் மாற்றம்
இலங்கை பிரஜை ஒருவரை அடையாளம் காணும் வகையில், சர்வதேச தரத்துக்கமைய தேசிய அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
இலங்கைப் பிரஜை ஒருவரை நம்பத்தகுந்த வகையில் அடையாளம் காண்பதற்காக 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட குடிமக்களின் சுய விபரங்கள், அவர்களின் உயிரியல் பண்புகள், புகைப்படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய பின்னர், தேசிய தனிநபர் பதிவேட்டை மத்திய தரவு அமைப்பாக நிறுவுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில்நுட்ப அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
e-NIC திட்டம்
புதிதாக வழங்கப்படும் தேசிய இலத்திரனியல் அடையாள அட்டை இல்லாமல் ஒருவர் வங்கி அல்லது நிறுவனத்துக்கு செல்லும் போது, அந்நபரின் தகவல்கள் தரவு அமைப்பில் இருந்தால் அவரின் முகத்தை ஸ்கேன் செய்து இலகுவாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக, e-NIC திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளை, ஆட்கள் பதிவுத் திணைக்களம் மேம்படுத்தி வருகிறது.
முக்கிய தரவு மையம், கைரேகை இயந்திரம், மடிகணினிகள் மற்றும் தரவுப் பிடிப்பு மற்றும் தரவை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆவண ஸ்கேனர்களுக்கான பொருள் கொள்முதல் இதில் அடங்கும். இதற்கான மொத்த செலவு 12,000 மில்லியன் ரூபாவாகும், இதற்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது.