மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் - சிவனேசதுரை சந்திரகாந்தன்
கிராமிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்ற அடிப்படையில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி - மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்
அபிவிருத்தி திட்டங்கள் பற்றிக் கூறுங்கள்?
பதில் - 2015இல் இருந்து 2019 வரைக்கும் நல்லாட்சி அரசாங்கம் எனும் பெயரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் செயற்பட்டு வந்தது.
அந்த ஆட்சியில் மக்களுக்கு இருந்த அபிப்பிராயங்களின் பிரதிபலனால் அதன் பின்வந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றினூடாக மக்கள் புதிய ஆட்சியை அமைந்து தற்போது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இதற்குப் பிரதானமாக இருக்கின்றது ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரபெரமுன கட்சியாகும். இந்நிலையில் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பக் காலத்திலிருந்து எதிர்ப்பு அரசியல் இல்லாமல் ஒரு நடைமுறையைச் சாத்தியமான அரசியலை மேற்கொண்டு வரும் கட்சி என்ற அடிப்படையில் பொதுஜன பெரமுன கட்சியில் இருக்கின்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது போல் எமது கட்சியும் கடந்த காலங்களில் பழிவாங்கப்பட்டு, குறிப்பாக நானும் சிறையில் அடைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோம். எமது செயலாளரும் தற்போதும் சிறையில் இருக்கின்றார்.
இந்நிலையில் தற்போதிருக்கின்ற அரசாங்கத்தோடு நாங்கள் பணியாற்றுகின்றோம். குறிப்பாக இந்நாட்டை ஜனாதிபதி அவர்கள் பொறுப்பேற்று சில நாட்களிலேயே நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றும் ஆரம்பித்து விட்டது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரம் பேரைத் தாண்டி இந்த கோவிட் தொற்று சென்று கொண்டிருக்கின்றது.
இந்த நிலைமை அரசாங்கத்திற்கும், அரசுடன் இணைந்து பணியாற்றுகின்ற எமக்கும் பெரிய சவாலாக இருக்கின்றது. எனினும் எமது நாட்டின் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.
குறிப்பாக ஒரு லட்சம் வேலைவாய்ப்பு, ஒரு லட்சம் காணித் துண்டுகளை வழங்குதல், தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், போன்ற பொதுவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல் கிராமிய பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என்ற அடிப்படையில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றோம்.
இதிலே நாம் சிந்திக்கின்ற விடையங்களை விரைவு படுத்திச் செயற்படுத்துவதற்கும் கோவிட் தொற்று தாக்கத்தைச் செலுத்தி நிற்கின்றது. பாரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை என்ற பார்வை மக்களுக்கும் இருக்கும். குறிப்பாக என்னைப்போன்ற அரசியல்வாதிகளுக்கும் ஒரு தாக்கத்தையும் கொடுக்கும் என்பதையும் நானும் எதிர்பார்க்கின்றேன்.
இவற்றையெல்லாம் கடந்து இந்த வருட இறுதிக்குள்ளே முடிந்தவரை கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு ஏற்றி கணிசமான முன்னேற்றத்துடன், அடுத்த ஆண்டிலிருந்து அதிகளவு வேலைத்திட்டங்களை மக்களின் காலடிக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பாகும்.
இருந்தாலும் ஒப்பீட்டிளவில் இவற்றையெல்லாம் ஈடுசெய்யக்கூடிய அளவிலே முடிந்தவரையிலான பொருளாதார முன்னேற்றத்தையும் மக்களுக்கான உணவுத்தட்டப்பாடு வராமலும், சேர்ந்துபோகாமலும், பட்டினி கிடக்காத சூழலையும் அரசாங்கம் முகாமை செய்து கொண்டு வருகின்றது.
கேள்வி - செயற்கை உர வகைகளைப் பயன்படுத்தி வந்த விவசாயிகளுக்கு இயற்கை உரவகைகளை பயன்படுத்துமாறு அரசு கூறுவது வரவேற்கத்தக்கது. ஆனாலும் போதியளவு இயற்கை உரங்களை விவசாயிகள் எங்கிருந்து பெற்றுக்கொள்வது அதனையும் அரசு வழங்கவுள்ளதா?
பதில் - கோவிட் காலகட்டத்தில் அரசாங்கம் தெரிவித்திருக்கும் இந்த கருத்து தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கள், தொடர்பிலும், கடந்த மாதம் ஜனாதிபதி அவர்கள் எம்மை அழைத்துச் செழிப்பான நாட்டை உருவாக்குதல், நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்தல் பசுமையான இலங்கையைக் கட்டியெழுப்புதல் போன்ற விடையங்கள், தொடர்பிலும், பேசியிருந்தார்.
இவ்விடையங்களை ஜனாதிபதி பதவியை அவர் பெறுப்பெற்றதிலிருந்து மேற்கொள்வதற்கு ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற செயற்கை உரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, வழங்கும் நிலைமை வகுத்திருந்தார்கள்.
இருந்தாலும், இரசாயன உர இறக்குமதியாளர்களின் பிரச்சனை, மக்களின் சேமிப்பு, தேவைக்கதிகமான யூறியா பயன்பாடு, போன்ற பல விடையங்கள் தொடர்பிலும், அந்த விடையத்தைச் செய்யமுடியாமலிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான நிலங்கள் நஞ்சாகிப்போகின்ற நிலைமையும் காணப்படுகின்றன.
புற்றுநோய், சிறு நீரகப் பிரச்சனை என பல்வேறு நோய்களும் இதனால் ஏற்படுகின்றன. இவ்வாறான நோய்களுக்குச் செலவு செய்யும் நிதியும், வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதி செய்யும் நிதியையும் ஒப்புநோக்கினால் அதிகளவு நிதி வீண் விரயமாகிச் செல்கின்றன.
பிள்ளைகளுக்கு நஞ்சான உணவு கொடுக்கப்படுகின்றன. அதிகமான உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளிலும் விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறான பலவிதமான சூழலைக் கருத்திற்கொண்டுதான் இந்த முடிவு ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும்கூட இதனை அமுலாக்குவது எவ்வாறு என்பது தொடர்பில் பல்கலைக்கழகங்கள், மற்றும் அரசியல்வாதிகளிடமும், பொறுப்பளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இயற்கையை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற நோக்குடைய சாதாரண விவசாயிகள் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
ஆனால் பெரிய முதலீடு செய்கின்ற கம்பனிகள், மற்றும் 50 - 100 ஏக்கர் வரையிலாக வேளாண்மை செய்கின்ற விவசாயிகளுக்கும் இது பெரிய பிரச்சனையாக வந்திருக்கின்றது.
மட்டக்களப்பிலே 2 இலட்சம் வயற் காணி உள்ளன அதில் 70 ஆயிரம் ஏக்கர் குளங்களை நம்பியும், ஏனையவை மழையை நம்பியும் வேளாண்மை செய்கை பண்ணப்படும் வயற்காணியாகும். வருடாந்தம் 3 இலட்சம் மெற்றிக்தொண் நெல் வருடத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் மெற்றிக்தொண் நெல்தான் உணவுக்காகத் தேவைப்படுகின்றது. இந்த விடையம் வந்தவுடன் உணவுக்காக விவசாயம் செய்வது எனும் விடையம் மேலோங்கலாம் என நாம் நம்புகின்றேன். அதேபோல் நஞ்சற்ற உணவையும் உண்ணவேண்டும் என்ற சந்தர்ப்பமும் உருவாக வாய்ப்புக்கள் வரும்.
இது ஒரு கடுமையான முடிவாக இருந்தாலும் கடந்த காலங்களில் விவசாயிகள் பாவித்து வந்த நச்சு செயற்கை உரங்கள் காரணமாக மண்ணிலே படிந்திருக்கின்ற நச்சுத்தன்மை அகலும் வரைக்கும் இது ஒரு கடுமையான சூழலாக இருக்கலாம். விவசாயி ஒருவர் 100 மூடை உற்பத்தி எடுத்திருந்தால் அவருக்கு 50 மூடை வீழ்ச்சி ஏற்பட்டிருந்தால் அந்த 50 மூடைகளுக்கும் நட்ட ஈட்டைக் கொடுப்பது என ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
அதேபோல் உள்ளூரிலும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்குதல், கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், போன்ற செயற்பாடுகளையும் மேற்கொண்டு விரைவாகத் திட்டத்தை வகுப்போம் இதனடிப்படையில் வருகின்ற போகத்தில் இது அமுலாகும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இம்மாவட்டத்திலும் இதனை வெற்றியடையச் செய்வதற்குப் பல கூட்டங்களை நடாத்தி வருகின்றோம். அதிலும் சரியான முகாமைத்துவத்தின் கீழ் செயற்படுத்துவதற்குரிய சரியான எண்ணப்பாட்டுடன் நானும் இருக்கின்றேன்.
கேள்வி - கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் உங்களது முன்னெடுப்பு எவ்வாறு அமைந்துள்ளது?
பதில் - கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடையம் ஒட்டுமொத்த கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சனையாக மாறியுள்ளது. இதனை முஸ்லிம் மக்கள் அவர்களுடைய அத்தியாவசியமான இருப்பு சம்மந்தமாக அவர்கள் பார்க்கிறார்கள்.
1960 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் தான் இருந்தது. பின்னர்தான் அது பிரிந்து அம்பாறை மாவட்டமாகியது. அங்கு தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களின் நிலைமை வேறுவிதமாகவும், அதுபோன்று கிழக்கில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளிலுள்ள அவர்களின் மதத் தலைவர்கள் மற்றும் அரசில் தலைவர்களின் கருத்துக்களும் வேறுவிதமாக இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் இப்பிரச்சனையைக் கையாண்டு தீர்த்து வைக்கவேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையில் இரக்கின்றேன். இதனை ஊடகங்களில் பேசி மக்களைச் சூடாக்கி பூதாகரமாக்காமல் அதே சமகாலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து உப பிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டுள்ளன.
அதுபோல் இதனை தரமுயர்த்தப்படும். அங்கிருக்கின்ற காணிக்கான கையாள்கையும், நிதிக் கையாள்கையையும் வழங்கிவிட்டால் அதன் பிரச்சனை தீர்ந்திடும். தங்களுக்கு எல்லை நிருணயங்களில் சில தடையாக இருக்கின்றது எனவும் இதனைத் தடுக்க நினைப்பவர்கள் எண்ணுகின்றார்கள்.
இதனையெல்லாம் இழுத்துக் கொண்டு போகாமல் முடித்துக் கொள்ள வேண்டும். எனவே மிக நீண்டகாலமாக இயங்கிக் கொண்டுவரும் இந்த உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதற்கு என்னால் முடிந்த அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டுள்ளேன்.
ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும், இதனை நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்கள் இருந்தாலும் தற்போதிருக்கின்ற அரசியல் சூழலும், அம்பாறையிலிருக்கின்ற அரசியல்வாதிகளின் அழுத்தங்களாலும் இது நீண்டு செல்கின்றது. ஆனாலும் இதனை இவ்வாறு விட்டுவிடாமல் தீர்வுகாணவேண்டும்.
இல்லாவிட்டால் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஒரு சவாலாக இருக்கும். இதனை மிகக் கவனமாகவும், பக்குவமாகவும் தீர்த்துவைப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி - மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
பதில் - மாவட்டத்தின் கால்நடை வளர்ப்பென்பது ஒரு பாரம்பரிய கால்நடை வளர்ப்பாக இருக்கின்றது. இது ஆரம்பக் காலத்திலிருந்து வந்தாலும் தற்போது வயல் நிலங்களும், மக்களும், கால்நடைகளும் அதிகரித்துள்ள நிலையில் மேச்சல்தரைப் பிரச்சனை இருக்கின்றது.
மாவட்டத்திலே சுமார் 5 இலட்சம் மாடுகள் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும். இதனால் கிடைக்கும் பால் உற்பத்தி போதுமா? கடந்த காலங்களைப்போல் மாடுகளை இறைச்சிக்காகவா, பாலுக்காகவா வளர்க்கப்படுகின்றன, என்ற கேள்வியும் எழுகின்றன.
இருந்தாலும் இந்த பாரம்பரிய மாடு வளர்ப்பை எவ்வாறு தக்கவைப்பது? குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அரச நிருவாகம் சிறப்பாக இயங்கவில்லை. குறிப்பாக வனவளப் பிரிவின் எல்லைகளைக் கடந்து செல்லலாம், அக்காணிகள் பயன்படுத்தப்பட வில்லை.
இப்போது யானையும் அதிகரித்துள்ளது. யானைப் பாதுகாப்பு வேலிகள் இடவேண்டும், அதுபோல் சிங்கள மக்களின் எல்லைகளுக்குள் மாடுகள் செல்கின்றபோது ஏற்படுகின்ற பிணக்குகள், மகோயா பகுதியில் ஏற்படுகின்ற பிரச்சனை, இந்நிலையில் மேய்ச்சல் தரைப் பகுதியை ஒதுக்குவது தொடர்பில் ஆராய்கின்றோம்.
கால்நடைகளிலிருந்து உச்சப் பயனை அடைவது தொடர்பில் மக்களும், பண்ணையாளர்களும் சிந்திக்கவேண்டும். கால்நடை அமைச்சும், அந்த திணைக்களமும் சரியான வழிகாட்டல்களையும் செய்யவேண்டும். அதுவும் இன்னும் இடம்பெறவில்லை இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு நாம் சரியான முயற்சி எடுத்து வருகின்றோம்.
இயற்கை உர உற்பத்திக்குக் கால்நடைகளின் சாணம் மிக முக்கியமானதாகக் காணப்படுவதனால், திட்டமிடப்பட்ட முறைமைக்குள் கொண்டுவருவதற்குரிய தேவைப்பாடு எழுந்துள்ளது. இவற்றையெல்லாம் செய்து கொடுப்பதற்குரிய பொறுப்பும் என்மீதும் சுமத்தப்பட்டுள்ளது.
கேள்வி - களுதாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் உற்பத்தி செய்யும் மிளகாய் உள்ளிட்ட மேட்டுநில பயிர்செய்கைகளின் விளைபொருட்களுக்குரிய விலைகளை அப்பகுதி விவசாயிகள் தீர்மானிக்க முடியாமல் பெருநட்டத்தை எதிர்கொண்டு வருகின்றார்கள் விவசாயிகளின் விளைபொருட்களின் விலைகளை அவர்களே தீர்மானிக்க என்ன செய்யலாம்?
பதில் - உற்பத்தியாளர்கள் மிக உச்சபயனை அடைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாகும். இருந்தாலும் இந்த உற்பத்தியாளர்களுடைய விடையங்களை ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவைப்பாடு, அரசியல்வாதிகளுக்கும், திணைக்களங்களுக்கும் இருக்கின்றது.
துரதிஸ்ட்டவசமாக விவசாய அமைப்புக்கள் சரியாக இயங்குவது கிடையாது. விவசாயத்திலே துறைசார்ந்த நிபுணர்கள், மற்றும் விவசாயச் சங்கங்கள் அனைத்தும் வெறுமனே பெயரளவிலே இருக்கின்றதே தவிர இவர்கள் அனைவரும் ஒரே இடத்திலிருந்த திட்டமிட்டு பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும், விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பது தொடர்பிலும் ஆராய்வது கிடையாது.
அதிகமான உற்பத்திகள் வருகின்றபோது அதனை எங்கு சேகரிப்பது, எங்கு சந்தைப்படுத்துவது, போன்ற விடையங்கள் தொடர்பிலான திட்டமிடல்கள் இல்லை இதனை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்.
இதனைத் திட்டமிடக்கூடிய அளவிற்குரிய நேரத்தையும் விவசாய அமைப்புக்களும், விவசாயத் திணைக்களமும் ஒதுக்குவதுமில்லை. சிறைச்சாலையிலிருந்து வெளியில் வந்து நிர்வாகத்தினரோடு வேலை செய்கின்ற வேளை இதனை நான் ஏன் குறை கூறுகின்றேன் என்றால் அதிகமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்தற்குரிய திட்டமிடல் இல்லாமல் இருக்கின்றது என்ற கவலை எனக்கிருக்கின்றது.
இன்னும் இதனைப் பேசிக் கொண்டிருக்காமல் இருக்கின்றவர்களை வைத்து வேலைகளைச் செய்து, குறிப்பாக வெளிமாவட்டங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் மட்டக்களப்பு உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கும், நமது விவசாயிகளும், மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி விடுகின்றார்கள்.
மாறாக விவசாய அமைப்புக்கள் இந்த மரக்கறி உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதும் இல்லை, விலைகளைத் தீர்மானிப்பதும் இல்லை. களுதாவளையில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தைத் திறந்து வைப்பது எளிதான விடையம் அதனைத் திறந்த பின்னர் அது இயங்குவது எவ்வாறு என்பது பற்றி ஆராயவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பலவீனமான விடையம் என்னவெனில் முந்திரியம் விதை ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபா போகின்றபோது உற்பத்தியாளர்கள் மொத்த விலையாக ஒருகிலோ விதையை 100 ரூபாவுக்குத்தான் விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகின்றது. அதுபோல் ரூனா (கிளைவாளை) எனும் மீனைப் பிடித்து 700 ரூபாவுக்கு விற்பனை செய்பவர்களும், அதனை 1800 ரூபாவுக்கு விற்பனை செய்பவர்களும் இருக்கின்றார்கள்.
அதனைப் பாதுகாப்பது, பேணுவது, போன்ற விடையங்களிலும், உற்பத்தி துறையிலும் எமது மக்கள் இன்னும் வீழ்ச்சியில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறுதான் வேளாண்மைச் செய்கையிலும் இடம்பெற்றுக் கொண்டு வரப்படுகின்றன.
மக்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு துறைசார்ந்த அமைப்புக்களும், திணைக்களங்களும். அரசியல்வாதிகளும், சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். துரத்திஸ்ட வசமாக எமது ஏழை விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றம் செய்ய வேண்டிய சிலரின், பொறுப்பில்லாத செயற்பாடுகளும், மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
இதனையெல்லாம் இனங்கண்ட அரசியல்வாதி என்ற அடிப்படையில் இதனையெல்லாம் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் இருக்கின்றது. அடுத்த வருடம் இவற்றுக்கான கேள்வினை என்னிடம் கேட்டால் பல முன்னேற்றகரமான பதில்களை வழங்குவேன். கேள்வி - வருடாந்தம் மட்டக்களப்பு மாவட்டம் வருடாந்தம் எதிர்கொள்ளும் வெள்ளப்பெருக்கைத் தடுப்பதற்கு விசேட திட்டங்கள் ஏதும் உள்ளதா? பதில் - மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாரியளவிலாள குளங்கள் அமைக்கப்படவில்லை.
அதற்கு யுத்தம் மிகப்பெரிய காரணமாக அமைந்திருந்தது. அல்லது மகாவலி போன்ற பெருந்திட்டங்களை எமது மாவட்டத்தில் அனுமதித்திருக்கவில்லை. அதனை இப்போதுகூட அனுமதித்தால் எவ்வாறு சாத்தியமாகும் என்ற கருத்தும் உள்ளது. அரசு என்ற அடிப்படையில் நாங்களும் திட்டமிட்டு வருகின்றோம்.
2008ஆம் ஆண்டுக் காலத்தில் சுமார் 42ஆயிரம் நெற்காணி காணப்பட்டன. அது தற்போது 90 ஆயிரத்தைத் தாண்டியிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரையில் இன்னும் 50 அயிரம் ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்குரிய நிலைமையை ஏற்படுத்திவிட வேண்டும் என நினைக்கின்றேன்.
அதற்கு அதிகளவு நிதி வளம் தேவையாகவுள்ளது. இதற்குரிய திட்டமிடல் உள்ளது. அதனைச் செய்து முடிக்கலாம் என நினைக்கின்றேன். ஊவா மாகாணம், மற்றும் பொலநறுவையிருந்து வரும் வெள்ளநீர் மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்துத்தான் செல்கின்றன.
இதுதொடர்பிலும். நீர் முகாமைத்துவம் தொடர்பிலும், கலந்துரையாடியுள்ளோம். இதனைப் படிப்படியாக முன்னேற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். வெள்ளம் வருவது என்பதை மட்டக்களப்பு மாவட்டத்தில் தவிர்க்க முடியாதுள்ளது.
ஆனாலும் கடலிலே வீணாகக் கலக்கின்ற நீரை முடிந்தவரைச் சேமித்து வைக்கவும், வெள்ள நிலைமையைக் குறைக்கவேண்டும் என்பதுவும் எமது எதிர்பார்ப்பாகும்.
கேள்வி - நாடாளுமன்ற பதவியிலும் பார்க்க முதலமைச்சர் பதவியை வைத்து கொண்டு அதிகளவு அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றீர்களா?
பதில் - அவ்வாறு கூறமுடியாது. நான் முதலமைச்சராக இருந்த சூழல் வேறு, அப்போது இலங்கையில் யுத்தம் முடிவுறுத்தப்படவில்லை, வடமாகாணத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிரோடு இருந்தார்.
அப்போதைய நிலைப்பாடானது மாகாணசபை முறைமையானது தமிழ் மக்களுக்குப் போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சரைக் கொண்டுவர வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் அப்போது செயற்பட்டது.
அப்போது அரசாங்கமும், வெளிநாடுகளும் அதிகளவான நிதியை மாகாணசபைகளுக்கு ஒதுக்கீடு செய்திருந்தன. அதனை நானும் என்னால் முடிந்தவரையில் பயன்படுத்தினேன் என்பது உண்மை.
போராட்டம் முடிவுற்ற பின்னர் ஏற்பட்ட மாகாணசபைத் தேர்தல், வடமாகாணத்தில் முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், விட்ட பிழைகள் எல்லாம் மாகாணசபை முறைமையைச் சரியா பிழையா என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
என்னைப் பொறுத்தவரைக்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றப் பேரவைக்குக்கும் நாம் கூறியது மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய மாகாணசபை முறையைக் கொண்டு வரவேண்டுமாக இருந்தால் குறிப்பிட்ட வருமானத்தில் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைகளுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்கும் கொண்டு வரவேண்டும்.
அவ்வாறு வந்தால் மாவட்டத்தில் வருகின்ற உள்ளூர் உற்பத்திகளையும் வைத்து அதிகளவான அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றேன். அது ஒரு அரசியல் ரீதியான பிரச்சனை. தற்போதைய சூழலில் ஒரு எம்.பி ஆக இருந்து கொண்டு எதனைச் செய்கின்றீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கோவிட் -19 அனைத்தையும் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றது.
நான் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் எனக்கு அரசாங்கத்திடமிருந்து சொல்லப்பட்டது, எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும், முதற்தடவையாக 5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதாகப் பேச்சளவில் ஒப்புக்கொண்டதாக இருக்கின்றது. அடுத்த வருடங்களில் அந்த நிதி மாவட்டத்திற்கு கிடைத்தால், அதிக அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும். எனினும் தற்போதைய நிலையிலும் நாங்கள் பணிகளை ஆற்றிவருகின்றோம்.
கேள்வி - எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தங்களுடைய கட்சி தனித்தா அல்லது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடும்?
பதில் - தற்போதைய நிலையில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடாத்துவது என்ற பிரச்சனை உள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் அதில் ஆட்சியைக் கைப்பற்றுவது எவ்வாறு என்பது தொடர்பில்தான் நாங்கள் செயற்படுவோம்.
கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிதான் வரவேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் வியூகங்கள் வகுப்போம்.
கேள்வி - தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு உரிமையுடன் இணைந்த அபிவிருத்தியை தங்களால் முன்னகர்ந்த முடிகின்றதா?
பதில் - உரிமை அரசியல், அபிவிருத்தி அரசியல் எனக் குழப்பமாக கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது, போலியாகத் தேசியம் என்று பேசி எதனைச்சாதிக்க முடியும்.
இப்போது இலங்கையிலே அரசியல் செய்கின்ற தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கை ரீதியான முடிவு என்ன? எமது கட்சி மிகத் தெளிவாகச் சொல்கின்றோம் இங்கு தனி இராச்சியம் சாத்தியமில்லை. இப்போது வடக்கு கிழக்கும் சாத்தியமில்லை. அரசியலமைப்பிலிருக்கின்ற 13வது சீர்திருத்தத்தைத்தான் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அதிலுள்ள அதிகாரம் போதாது, காணி, பொலிஸ் அதிகாரத்தைத் தாருங்கள் எனக் கேட்பது ஒருவிடயமாகும்.
இப்போது நல்லாட்சியில் கைகழுவி விட்ட மாகாணசபை இல்லாமலுள்ளோம். உரிமை என்றால் மாகாணசபை முறைமையை ஏற்றுக் கொண்டு அதனூடாக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது. உறுதியான சரியான முறையில் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் மாகாணசபை அமையப்பெற்று நிதியும், காணி, பொலிஸ் அதிகாரமும் கிடைக்கப்பெற்றால் மிகப்பெரிய ஆளுமை மிக்க நிறுவனமாக இதனை மாற்றியமைக்கலாம் என நான் நம்புகின்றேன்.
ஆகையால் இவற்றைப் பெறுவதற்குப் போராடிக் கொண்டு மக்களை மேம்படுத்துவதற்கு எவ்வாறு இந்த அரசாங்கத்தைப் பயன்படுத்த முடியும் என்பதில் நாம் செயற்படுகின்றோம். ஆகையால் இருக்கின்ற மக்களைக் காப்பாற்றிக் கொண்டுதான் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குச் செல்லவேண்டுமே தவிர மக்கள் மாவட்டத்தைவிட்டு வெளி பிரதேசங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டால் யாருக்கு அந்த அதிகாரம் என்ற கேள்வி எழும். ஆகையால் மிகக் கவனமாகப் போலித் தேசியம் பேசுகின்ற விடையமும் யாதெனில் அரசியலுக்காகவும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் கருத்துகளை வெளிவிடுவதாகும். எனவே நடைமுiறாயன சாத்தியமான விடயங்களைக் கொண்டு செல்கின்றபோது மக்களுக்குத் தேவையான உரிமையும், அபிவிருத்திகளும், தானாகக் கிடைப்பதற்கு நாம் ஒரு மக்கள் இயக்கமாகப் போராட வேண்டுமே தவிர இன்னமும் மக்களை முட்டி மோதி, அடிபட வைக்கக்கூடாது என்பது எமது நிலைப்பாடாகும்.
கேள்வி - நீங்கள் கிழக்கில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்தான் இலங்கையில் தற்போதும் உள்ளார்கள், இந்நிலையில் தங்களுடைய கட்சியை சேர்ந்த ஒருவர் கிழக்கில் மீண்டும் முதலமைச்சராக வரும் சந்தர்ப்பத்தில் மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரத்தை அந்த அரசியல் தலைவர்கள் தருவார்கள் என நினைக்கின்றீர்களா?
பதில் - காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவை எனப் பறித்து எதனைச் சாதிக்கப்போகின்றோம். நாட்டிலே சிங்களப் பெரும் தேசிய வாதிகள் எனச் சிந்திப்பவர்கள், தமிழ் மக்களுக்கு ஒரு அடிப்படைக் கட்டுமானமாகப் புலி அமைந்துவிடக்கூடாது என்பதாகும். நாங்கள் கேட்பது எமது தனியான மாகாணத்திற்கு மாத்திரமானதாக இல்லை.
மாகாணசபைகளுக்குச் சட்ட ஒழுங்குகளைப் பின்பற்றக்கூடிய அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள பொலிஸாரை அழைத்துப்போசுவது. அல்லது தேவைப்பட்டால் ஜனாதிபதியுடன் பேசி கிழக்கு மாகாணத்திற்குரிய பிரதிப்பொலிஸ் மா அதிபரை நியமிப்பது. இவ்வாறான விடையங்களை தற்போது சாத்தியமாக்க முடியும்.
அதுபோல் தேவையான வரிஅறவீடு, போக்குவரத்து மாற்றங்கள், போன்றவற்றையும் சேர்ந்து மேற்கொள்ள முடியும். அதுபோல் அன்றிருந்தவர்கள், தற்போதும் இருக்கின்றார்கள் அவர்கள் தருவார்கள் என்பதல்ல மக்களுக்குத் தேவையான காணியை மக்களுக்கு வழங்குவதுதான் முறைமை அதனை மத்திய அரசாங்கமும், மாகாண அரசாங்கமும் பேசித்தீர்ப்பதுதான் வழியாகும்.
அரசாங்கத்தைப் பயன்படுத்தி அதிகூடிய சேவைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் எதுவித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளாமல் தரவில்லை, தரமாட்டார்கள், என வெறுமனே பேசிக் கொண்டிருப்பதனால் எதுவும் நடக்காது.
கேள்வி - நீங்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் பார்க்க சிறைச்சாலையில் இருந்த காலத்தில் அதிகளவு மக்கள் ஆதரவுகளையும் அரசியல் அனுபவத்தையும் பெற்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதா?
பதில் - அனுபவம் என்பது தானாக அடிபட்டு வரும் பட்டறிவாகும். நான் அரசியல் பழிவாங்கலுக்காக அடைக்கப்பட்டேன் என்பதை அதனை உடைத்தெறிந்து நான் யார் என்பதைக் காட்டவேண்டியிருந்தது.
அதற்கு இயற்கையும் கடவுளும் உதவி செய்தது. நான் விடுதலைப் போராட்டத்தில் இருந்தபோது, முதலமைச்சராக இருந்தபோது என்மீது இருந்த நம்பிக்கையில் அடிப்படையில் பிள்ளையான் சிறையில் இருக்கக்கூடாது என்பதற்கிணங்க வாக்களித்திருந்தார்கள்.
எனக்கு எதிரானவர்கள் பலரும் எனக்கு வாக்களித்திருந்தார்கள். பலர் என்னைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வரவேண்டும் எனப் போராடினார்கள் அதன் பலனாகத்தான் எனக்கு அளிக்கப்பட்ட வாக்குகளைப் பாக்கிறேன். 2008ஆம் அண்டிலிருந்துதான் தேர்தல் அரசியலில் குதித்திருக்கின்றேன்.
அதிலே வீழ்ச்சி, எழுச்சி வந்திருக்கின்றன. இப்போதும் வளர்ச்சியாகவும், வீழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் நான் சிறையிலிருந்ததனால்தான் வாக்கு அதிகளவு கிடைத்தது, என்று என்னால் சரியாகச் சொல்ல முடியாது.
இருந்தாலும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி, மட்டக்களப்புக்கான தனித்துவம், கிழக்கு மாகாணத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான பணியில் நான் தொடர்ந்து பாடுபடுவேன். இது என்னுடைய இறப்பு வரைக்கும் இடம்பெறும் என்பதையும் நானும் என்னை நம்புகின்றேன்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
