காட்டு யானைகள் உயிரிழப்புக்கு காரணமான சந்தேகநபர் விளக்கமறியல்
திருகோணமலை - தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்தமைக்கு காரணமாக சந்தேகநபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று உத்தரவிட்டுள்ளார்.
கல்மெட்டியாவ, உல்பத்வெவ பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இரண்டு காட்டு யானைகள் இறந்து கிடந்தன.பரிசோதனை முடிவுகளின் படி மின்சாரம் தாக்கி இறந்துள்ளதாக வைத்திய அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன.
இதன்படி தம்பலாகாமம், கல்மெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வேளாண்மைக்காகவும், தோட்டப்பயிர்ச் செய்கைகளுக்காகவும் வைத்த மின்சாரத்தில் சிக்குண்டு இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.



