சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நபர் அதிரடி கைது
இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தடுப்புக்காவலில் இருந்து தப்பிச்சென்ற 54 வயதுடைய இலங்கையர் ஒருவர், வடத்துவாவில் உள்ள வாடகை வீடு ஒன்றில் ஒளிந்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்குலானையைச் சேர்ந்த இவர், கடல் வழியாக 337 கிலோகிராம் ஹெரோயினை இந்தியாவுக்குக் கடத்த முயன்றபோது இந்திய கடற்படையினரால் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் கொச்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், அங்கிருந்து தப்பித்து கடல் வழியாக மீண்டும் இலங்கைக்குத் திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோட்டம்..
இலங்கை திரும்பிய பின்னர், வென்னப்புவையில் கைது செய்யப்பட்டு மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த போது, அவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், நேற்று நள்ளிரவு வடத்துவாவில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
சந்தேகநபரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.