சர்வதேச ஊடகங்களின் பார்வையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி இடதுசாரியா..!
கோட்டாபய ராஜபக்ச 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இலங்கைக்கு அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
அதுவரை இருந்த ஊழல் மேட்டுக்குடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து சமூக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர் என்பது அரசியல் அரங்கில் வெளிப்பட்ட ஒரு விசேட அம்சமாகும்.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தேர்தல் பிரசாரத்தில் அந்த எதிர்பார்ப்புகளைப் பெருமளவில் பிரதிநிதித்துவப்படுத்தியது. இறுதியாக 2019 பொதுத் தேர்தலில் 3 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்த, குறித்த கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் வெற்றியானது சர்வதேச ஊடகங்களிலும் கவனத்தை ஈர்த்தது.
சர்வதேச ஊடகங்கள்
(செப்டெம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பிபிசி, ஸ்கைநியூஸ், ஏபி, அல்ஜசீரா, என்டிடிவி, டைம்ஸ், இந்தியாடுடே, டைம்ஸ் ஒப் இந்தியா, எகனாமிக்ஸ் டைம்ஸ் போன்ற ஊடகங்களில் வெளியான பல அறிக்கைகள் மாதிரியாகக் கொள்ளப்பட்டு இந்த ஆய்வுக்கதை தொகுக்கப்பட்டுள்ளது)
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்றது.
மறுதினம், அதாவது 22 ஆம் திகதி மாலை, மக்கள் வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பல காரணங்களுக்காக சர்வதேச ஊடகங்கள் அந்த நிகழ்வு குறித்து சிறப்பு கவனம் செலுத்தியமை குறிபிடத்தக்கது.
பல முன்னணி சர்வதேச ஊடகங்களில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட செய்திகளை நாம் கருத்தில் கொள்ளும்போது, அரசியல் திருப்பம் தொடர்பான பிரதான விடயங்களை நன்கு புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. மேற்சொன்ன சர்வதேச ஊடகங்கள், அநுர குமார திஸாநாயக்க ஒரு இடது சாரி அல்லது மார்க்சிஸ தலைவர் அல்லது அந்தச் சித்தாந்தத்தின் பக்கம் சாய்ந்த ஒரு தலைவர் என அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.
மக்கள் எழுச்சிகள்
நாம் தேர்ந்தெடுத்த ஊடகங்களில், ஸ்கை நியூஸ், ஏபி, டைம்ஸ், எகனாமிக்ஸ் டைம்ஸ்/இந்தியா டைம்ஸ் ஆகிய நான்கு ஊடகங்களும், தலைப்புச் செய்திகளில் அநுரகுமார திசாநாயக்கவை அறிமுகப்படுத்த 'மார்க்சிஸ்ட்' அல்லது 'இடது சாரி' என்ற சொற்களைப் பயன்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
AP - marxist Anura kumara (23 September)
Sky News - left leaning president (22 September)
The economic time india times - Marxist president (23 September)
ஏனைய செய்திகளின் முதல் சில வாக்கியங்களிலும் மேற்குறிப்பிட்ட ஊடகங்களிலும் அநுர குமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியத்தை மார்க்சிஸ்ட் அல்லது இடதுசாரியென அறிமுகப்படுத்தியிருந்த போக்கை இங்கு முக்கிய அம்சமாகக் குறிப்பிடலாம்.
ஆனால் பிபிசி, அல்ஜசீரா மற்றும் என்டிடிவி (NDTV) போன்ற சில ஊடகங்கள் மாத்திரம் அந்த அரசியல் திசையமைவை ஓரளவு கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
BBC - leftleaning politician (23 September)
NDTV - Marxist leader (23 September)
Times of India - Marxist leader (22 September)
Aljazeera - marxist leaning politician (23 September)
"இலங்கையின் புதிய இடது சாரி ஜனாதிபதி பதவியேற்றார்" என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்ட பிபிசி செய்தியில் அநுர குமார திஸாநாயக்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறுபற்றிய சுருக்கமான விளக்கம் அறிக்கையிடப்பட்டிருந்தது, அங்கு அவர் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த மக்கள் விடுதலை முன்னணியின் போராட்ட வரலாறு குறித்து எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அந்த விளக்கத்தின் முடிவில் பின்வருமாறு ஒரு வாக்கியம் சேர்க்கப்பட்டிருந்தது: "திசாநாயக்க அண்மை காலத்திலிருந்து தனது கட்சியின் கடும்-இடது சாரி நிலையை நடுநிலைக்கு மாற்ற முயன்றார்." அல்ஜசீரா இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையானது 'இடது சாரி அரசியல்வாதி அனுர குமார திஸாநாயக்க' என ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான மக்கள் எழுச்சிகள் பற்றிய விபரங்களையும் அறிக்கை அளித்திருந்தாலும் கூட, அந்தக் கட்சியானது மார்க்சிஸ்ட் கட்சியாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தக் கட்டுரையின் பிற்பாதியில் மார்க்சியப் புரட்சியாளர் சே குவேரா அவருக்கு பிடித்த வீரர்களின் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசியல் செய்தி
அத்துடன், அநுர குமாரவின் அரசியல் பயணத்தின் அண்மைக்கால போக்கைச் சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடைய புகழ் பெருகிவரும் நிலையில் திறந்த பொருளாதாரம் தொடர்பில் நம்பிக்கை வைத்து, தனியார்மயமாக்கலை முற்றிலுமாக எதிர்க்காமல் அவர் தமது கட்சியின் சில கொள்கைகளைத் தளர்த்தினார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய ஊடக நிறுவனமான என்டிடிவி (NDTV)யின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட நீண்ட அறிக்கையில் அநுரகுமாரவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பில் எழுதப்பட்டிருந்தது.
நாட்டின் பொருளாதாரத்தின் முறையற்ற முகாமைத்துவம் மற்றும் ஊழல் மோசடிகளை நிறுத்த வேண்டியதன் காரணமாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, நாட்டு மக்களுக்குப் பரந்த அரசியல் செய்தியை வழங்குவதற்காகக் கட்சியின் சோசலிச கொள்கைகளிலிருந்து சற்று விலகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தாந்த பரிணாமம் சில பாரம்பரிய இடதுசாரிகளால் விமர்சிக்கப்பட்டாலும், திஸாநாயக்க அதைப் பற்றி அவ்வளவு கருத்திற்கொள்ளவில்லை, ஏனெனில் அவரது கட்சியின் நோக்கம் பெரும்பான்மை மக்களுக்குச் சேவை செய்வதே தவிர இடது சாரி அரசியலில் ஒன்றோடொன்று ஒட்டி இருக்க வேண்டும் என்பது அல்ல என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
நாம் அவதானித்த அநேகமான அனைத்து சர்வதேச ஊடகங்களும் வெளியிட்ட செய்திகளைக் கருத்தில் கொள்ளும்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நியமனம் தொடர்பான செய்திகளில் பொதுவான சில ஒற்றுமைகளை அவதானிக்கலாம்.
ஏறக்குறைய அந்த அறிக்கைகள் அனைத்திலும், அநுர குமாரவின் தேர்தலுக்கான முக்கிய காரணங்களாக முன்னர் காணப்பட்ட மேலாதிக்க அரசியல்வாதிகளின் முறைகேடான முகாமைத்துவம், மோசடி மற்றும் ஊழல் மேலும் பொதுமக்களைக் கடுமையாகப் பாதித்த கொவிட் தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பன குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்திய ஊடகங்கள்
மேலும், இலங்கையில் நிலவிய உயரடுக்கு மற்றும் குடும்ப அரசியலுக்கு அப்பால், அநுர குமார திஸாநாயக்க சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒரு ஜனாதிபதி என்பதை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊடக அறிக்கையும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், திஸாநாயக்கவின் முழுநேர அரசியல் வரலாறு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அவரது அரசியல் வாழ்க்கை வரலாறு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி பற்றிய விரிவான அறிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன. இங்கு மேற்கத்தேய ஊடகங்களை விட இந்திய ஊடகங்கள் விரிவான செய்திகளை வழங்க முனைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய- சீனா பனிப்போர் அத்துடன், அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றது தொடர்பான செய்தியில், மேற்குலக ஊடகங்கள் கவனம் செலுத்தாத விடயம் ஒன்றை இந்திய ஊடகங்கள் கவனத்தில் கொண்டுள்ளன. அதுதான் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு அமையும் என்பதாகும்.
அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுமா என்ற சந்தேகத்தை இந்திய ஊடகங்கள் அனைத்திலும் அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியா டுடே இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 'இலங்கை மற்றும் இந்திய உறவுகள்' என்ற தலைப்பில் துணைத் தலைப்புடன் ஒரு செய்தி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இலங்கைத்தீவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்நிறுத்த உடன்படிக்கையின் தூதுவராகச் செயல்பட்ட நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களை மேற்கோள்காட்டி அறிக்கையிடப்பட்டதாவது, திஸாநாயக்க தனது தேர்தல் பிரசாரத்தின்போது இந்தியா, சீனா மற்றும் மேற்குலக நாடுகள் மத்தியில் நட்பைப் பகிர்ந்துகொண்டதால், அவர் அனைத்து இராஜதந்திர உறவுகளையும் சமநிலையில் பேணி தலைசிறந்த ஒரு தலைவராகத் திகழ்வாரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அநுரகுமார சீனாவுக்கு ஆதரவான தலைவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அதே அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய என்டிடிவி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இடதுசாரி ஜனாதிபதி சீனாவை நோக்கிய வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவாரென அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், உலகின் சக்திவாய்ந்த நாடாக இந்தியா நிலைநிறுத்தப்படுவதையும், பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்தியாவிற்கு காணப்படும் அவசியத்தையும் அநுர குமார திஸாநாயக்க புரிந்துகொண்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை மேற்கோள்காட்டி இங்குச் செய்தி அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆகவே, அவர்கள் இந்தியாவுடன் நெருக்கமாகப் செயற்படுவார்கள் என்று குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
டைம்ஸ் ஒப் இந்தியா இணையதளத்தில் வெளியான செய்தியில், 'இந்தியா குறித்த அவரது நிலைப்பாடு என்ன' என்ற துணைத் தலைப்பின் கீழ் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அநுர குமார திஸாநாயக்கவின் தாய்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னனி இந்திய எதிர்ப்புக் கட்சியாக இருந்ததை அந்த அறிக்கை நினைவுபடுத்தியுள்ளது.
அதன் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் முயற்சியின் கீழ் 'இந்திய விஸ்தரிப்பு வாதம்' என்ற தொனிப்பொருளில் கட்சி உறுப்பினர்களுக்குக் கற்பித்தல் குறித்தும் குறிப்பிடப்பட்டது. மேலும், மக்கள் விடுதலை முன்னணி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த விதம் மற்றும் அந்த இந்திய எதிர்ப்பு கிளர்ச்சிகளுக்கு எவ்வாறு காரணமாக அமைந்தது என்பது தொடர்பாகவும் இங்கு விரிவாகக் கூறப்பட்டிருந்தது.
அநுர குமாரவின் கட்சித் தரப்பு இந்திய எதிர்ப்பு மற்றும் சீன ஆதரவு நிலைபாட்டில் இருந்த போதிலும், தற்போது இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்தும் போக்கை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், புதிய ஜனாதிபதி சர்வதேச நாடுகளுடன் இணைந்து விரிவாகச் செயற்பட விருப்பம் தெரிவித்த போதிலும், புவிசார் அரசியலில் இந்தியாவிடமோ அல்லது சீனாவிடமோ சரணடைய தயாராக இல்லை எனவும் இறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் பல்வேறுபட்ட கருத்துக்கள், சந்தேகங்கள் வெளியிடப்பட்டாலும், அது தொடர்பாக உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் வரலாறு எதுவாக இருந்தாலும், அவர் மார்க்சியத்தைப் பின்பற்றுகிறாரா, சமூக ஜனநாயகத்தைப் பின்பற்றுகிறாரா, புதிய தாராளவாதத்தைப் பின்பற்றுகிறாரா, அல்லது வேறுவிதமான சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறாரா மற்றும் எந்த மாதிரியான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவார் என்பதை அவர் எதிர்காலத்தில் நாடாளுமன்ற அதிகாரத்தைக் கையாளும் விதத்திலும் ஆட்சியை வழிநடத்தும் விதத்திலும் தெரிந்துகொள்ள கூடியதாக இருக்கும்.
கட்டுரை - சுபாஷினி சதுரிகா
மொழிபெயர்ப்பு - ரிக்சா இன்பாஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Parthiban அவரால் எழுதப்பட்டு, 17 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.