இலங்கையின் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச மனிதை உரிமை அமைப்புக்களின் ஒன்றிணைந்த கண்டனம்!
சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை கடமைகளை மீறுவதுடன் மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது குடியியல் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளை பாதிக்கலாம். அத்துடன் நெருக்கடியின் போது சர்வதேச ஆதரவையும் அது பாதிக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இது குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனத்தை கூட்டறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளன.
சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், மனித உரிமைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு, பிரான்சிஸ்கன்ஸ் இன்டர்நேஷனல், மனித உரிமைகள் கண்காணிப்பகம்,சர்வதேச நீதிபதிகள் ஆணையம், அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான சர்வதேச இயக்கம், மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, இலங்கை பிரசாரம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு,சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு என்று இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
சர்வதேச மனிதை உரிமை அமைப்புக்களின் கண்டனம்
தற்போதைய பொருளாதார நெருக்கடியானது பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளின் பரவலான மீறல்களிலிருந்து உருவானது என்பதை ஒப்புக்கொள்வது முக்கியமாகும்.
இலங்கை அதிகாரிகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு எதிரான பழிவாங்கல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
மக்கள் தங்கள் குறைகளை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வெளிப்படுத்துவதற்கான உரிமையை வன்முறைக்கு பயப்படாமல் உறுதிப்படுத்த வேண்டும். எனினும் இலங்கை அதிகாரிகள் சர்வதேச சட்டத்தின் கீழ் கடமைகளை மீறுவதுடன் மனித உரிமைகளை மதிக்கத் தவறுவது குடியியல் அரசியல் பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகளை பாதிக்கலாம். அத்துடன் நெருக்கடியின் போது சர்வதேச ஆதரவையும் பாதிக்கலாம் என்று குறித்த அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.
இலங்கையில் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக இலங்கை அதிகாரிகளின் வன்முறை அடக்குமுறை மற்றும் பழிவாங்கல்களை அதிகரித்து வருகின்றன. 2022 ஜூலை 22 அன்று கொழும்பில் உள்ள போராட்ட முகாம் மீதான கைதுகள் மிரட்டல்கள் மற்றும் மிருகத்தனமான தாக்குதல் என்பன மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் 2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று அன்று மாலை 5:00 மணிக்குள் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து அகலுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பயன்படுத்தாமல் இருப்பதையும் 'கோட்டா கோ கம' தளத்தில் அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளை மதிப்பதையும் இலங்கை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
ஜூலை 18 அன்று ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோதே அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தினார் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு கைது மற்றும் தடுப்புக்காவலில் பெரும் அதிகாரங்களை வழங்கினார்.
இந்த அவசரக்கால சட்டத்தின் ஊடாக அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் சட்டபூர்வமான அரசியல் வெளிப்பாட்டைத் தடைசெய்வதற்காக கருத்துச் சுதந்திரம் தன்னிச்சையாக கட்டுப்படுத்தப்படுகிறது அத்துடன் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் கீழ்ப்படியாமைச் செயல்களுக்காக அரசுத் தரப்பு அதிகாரிகள் அதிகப்படியான மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
அதேநேரம் பொருளாதார நெருக்கடிக்கு உரிய முறையில் பதிலளிக்கும் நாட்டின் திறனை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இலங்கையின் நட்பு நாடுகள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்த போதிலும், அந்த நாடுகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவில்லை எனவே இலங்கையின் சர்வதேச பங்காளிகள், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின்படி அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை மதித்து பாதுகாப்பதற்கு இலங்கைக்கு கடப்பாடு உள்ளது.
ஜூலை 27 அன்று இலங்கையின் நாடாளுமன்றம் புதிய அவசரகால விதிகளுக்கு ஒப்புதல் அளித்தது அது காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு சந்தேகநபர்களை உரிய செயல்முறை பாதுகாப்புகள் இல்லாமல் தேடுதல் கைது செய்தல் மற்றும் தடுத்து வைக்கும் அதிகாரங்களை வழங்குகின்றன.
கைதிகளை உடனடியாக நீதிபதி முன் நிறுத்தாமலும் அவர்கள் விரும்பும் சட்டத்தரணிகளை அணுகாமலும் 72 மணிநேரம் வரை காவலில் வைக்க முடியும்.
இத்தகைய சூழ்நிலைகளில் காவலில் வைப்பது என்பது கைதிகள் சித்திரவதை அல்லது பிற மோசமான தண்டனைகளுக்கு உள்ளாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. போராட்டங்களை செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் அதிகாரிகளால் குறிவைக்கப்பட்டதாக வெளியான செய்திகளால் தமது அமைப்புகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
சந்தேகத்துக்குரியர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில் பிடியாணைகளை வழங்கவும் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை உடனடியாகத் தெரிவிக்கவும் அதிகாரிகள் தவறிவிட்டனர். தடுத்து வைக்கப்பட்ட பல போராட்டக்காரர்கள் தாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளனர்.
இந்தநிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கை அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளன.
பரிந்துரைகள்
கருத்து சுதந்திரத்தின் மீதான தடையை முடிவுக்குக் கொண்டு வந்து பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் மக்கள் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான தங்கள் உரிமைகளை பாதுகாப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறும் வகையில் ஜூலை 22 அன்று இடம்பெற்ற சித்திரவதை மற்றும் பிற மோசமான நடத்தை குற்றச்சாட்டுகள் உட்பட அடக்குமுறை தொடர்பில் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தவேண்டும்.
சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு அதிகப்படியான திகாரங்களை வழங்கும் மற்றும் மனித உரிமைகளை மேலும் துஷ்பிரயோகம் செய்ய உதவும் அவசரகால விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல்களில் ஈடுபட்ட எதிர்ப்பாளர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட 'சட்டவிரோதமான கூட்டத்தில்' பங்கேற்பதற்கான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கைவிட வேண்டும். அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அவசரகாலச் சட்டங்களின் கீழ் கொண்டுவரப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் அல்லது போதுமான ஆதாரங்கள் கிடைக்காத பட்சத்தில் கைவிட வேண்டும்.
எந்தவொரு நடவடிக்கையும் சர்வதேச நியாயமான விசாரணைத் தரங்களுக்கு இணங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் எதிர்ப்புத் தளங்களுக்கு சென்று வருவதை உறுதிசெய்து பழிவாங்கல்களுக்கு அஞ்சாமல் தொழில்சார் கடமைகளைச் செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும்.
ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவதையும் காவல் துறைக்கு இராணுவ உபகரணங்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களின் உடல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்.
கைது செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் தடுப்புக்காவலில் உள்ள இடம் பற்றி தெரிவிக்கும் உரிமை உட்பட மற்றும் ஒரு நீதிபதியின் முன் உடனடியாக முன்னிலைப்படுத்துவதற்கான உரிமை மற்றும் சட்ட ஆலோசகர் மற்றும் குடும்பத்தினருக்கான அணுகலை உறுதி செய்த வேண்டும்.
அமைதியான போராட்டக்காரர்களை குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை நிறுத்துங்கள்.
அமைதியான எதிர்ப்பாளர்கள் மீதான அனைத்து பயணத் தடைகளையும் மற்றும் பிற நிபந்தனைகளையும் நீக்குங்கள் என்றும் மனித உரிமை அமைப்புக்கள் பரிந்துரைகளை செய்துள்ளன.