இலங்கையின் தேர்தல் குறித்து பாராட்டு தெரிவித்துள்ள கண்காணிப்பு குழுக்கள்
இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் அமைதியாகவும், பெரிய வன்முறைச் சம்பவங்களோ, இடையூறுகளோ இன்றியும் நடைபெற்றதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தேர்தலை வெற்றிகரமாக முடிக்க உதவிய தேர்தல் ஆணையகம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை அவர்கள் பாராட்டியுள்ளனர். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின் தகவல்படி, நேற்று 108 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. எனினும், அதில் எதுவுமே பாரதூரமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
அதேவேளை, இந்த தேர்தல் அமைதியாக நடத்தப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் மக்கள் தொடர்பு மற்றும் ஈடுபாடு அதிகாரி Temitope Kalejaiye விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்த விரிவான கண்ணோட்டம் நாளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |