வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் அனுஷ்டிப்பு!
வலிந்து காணாமலாக்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்றையதினம் (25.08.2026) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
உரிய ஏற்பாடு
இதன் போது உரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் யாழ்.மாவட்டத்தில் சுமார் 2,300 பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,940 பேருக்கான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டவரின் பின்னாலும் ஒரு மனித உயிரும், ஒரு குடும்பத்தின் சமூக, பொருளாதார மற்றும் உணர்வுபூர்வமான வாழ்வும் உள்ளடங்கியுள்ளன.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீண்டகாலமாக சொல்லொணாத் துயரங்களையும், மனவேதனைகளையும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, அவர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து, சட்டத்துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து அவர்களுக்கான உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.