சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் - சிவசக்தி ஆனந்தன்
சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க. பத்மநாபாவின் 33 ஆவது நினைவு தினம் நாளையதினம் திங்கட்கிழமை (19.06.2023) அனுஷ்டிக்கப்பட உள்ளது.
சிவசக்தி ஆனந்தன் இன்று (18.06.2023) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய - இலங்கை ஒப்பந்தம்
எமது செயலாளர் நாயகமும் அவருடன் இணைந்து எமது
கட்சியின் பதின்மூன்று தோழர்களும் சர்வதேச சதியின் காரணமாக சென்னையில் படுகொலை
செய்யப்பட்டனர்.
தனது இறுதி மூச்சு வரை ஈழ மக்களின் விடுதலை ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு, அதனை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதில் உறுதியாக நின்று, களமாடி, எம்மையும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதற்காக வழிநடத்திய தோழர் க.பத்மநாபா.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக அன்று அவர் ஏற்றுக்கொண்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஒன்றே இன்றுவரையில் சர்வதேச ஒப்பந்தமாகத் திகழ்கிறது.
அதனூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபை முறைமையே இலங்கை அரசியல் யாப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழர்களுக்கான அதிகாரமாக உள்ளது.
இது போதாதென்பதைத் தெரிந்து கொண்டிருந்த ஈபிஆர்எல்எவ் சர்வதேச நாடொன்று எமது பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்ய நேர்ந்ததை தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதே நேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தமானது ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும் என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துவதாகவும் அமைந்தது.
ஆயுதப் போராட்டம்
தனிநாட்டிற்கான ஆயுதப் போராட்டம் 2009 இல் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் தனது கோர முகத்தை தமிழர்கள் மீது காட்டி வருகிறது.
2009 ஆம் ஆண்டு வரை வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை ஏற்றுக் கொண்டு தமிழர்களுக்கெதிரான ஒவ்வொரு வன்முறையிலும் அவர்களை அங்கு அனுப்பிவிட்டு, இப்பொழுது எமது தாயகப் பிரதேசத்திலிருந்தும் எம்மை விரட்டும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் கலக்கும் முயற்சிகளை மேலாதிக்க சக்திகள் மேற்கொள்கின்றன.
நாம் இப்பொழுது சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்பவர்களாக உள்ளோம்.
இந்த நிலையில் எமது இருப்பைத் தக்க வைக்க வேண்டுமாக இருந்தால், நாம் எமது குறுகிய கட்சிசார் அரசியல் நலன்களை முன்னிறுத்தாமல், எமது வருங்கால சந்ததி அச்சமின்றி, தமது தாயகப் பிரதேசத்தில் சகல உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எம் அனைவரதும் தலையாய கடமை பல்வேறு காரணங்களுக்காக நாம் தனித்தனி அரசியல் கட்சிகளாக மக்கள் சேவை ஆற்றலாம்.
வெற்றி வரை உறுதியுடன் போராடுவோம்
ஆனால் எமது ஒட்டுமொத்த நோக்கம் அரசியல் கட்சிகளைச் சார்ந்த நாமும் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்பதை உணர்ந்து, எமது இனத்தின் சமத்துவ சகவாழ்விற்காக உழைப்பதாகவே இருக்க வேண்டும்.
எமது செயலாளர் நாயகம் தோழர் க. பத்மநாபா சொன்னதைப் போன்று நாம் மக்களுக்காகவே மண்ணை நேசிப்பவர்களா இருக்க வேண்டும்.
அதனடிப்படையில் அவரின் மற்றொரு கூற்றின் படி 'ஐக்கியம் என்னும் தளத்தில் நின்று இறுதி வெற்றி வரை உறுதியுடன் போராடுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் அனைவரும் ஐக்கியமாக எமது இலட்சியமான தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று எம்மினத்தை அழிவிலிருந்து காப்போம் என்பதை இன்றைய 33 ஆவது தியாகிகள் தினத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சபதமேற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |