விழிக்குறைக்கு வழித்துணையாம் எம் வெண் பிரம்பு - சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம்
தினமும் பல்வேறு சவால்களுடன் கண்பார்வைகள் அற்றவர்கள் வெள்ளைப்பிரம்புடன் பயணிப்பதாக விழிப்புலனற்றவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
“விழிக்குறைக்கு வழித்துணையாம் எம் வெண் பிரம்பு” எனும் தொனிப்பொருளில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு தரினம் விழிப்புலனற்றோர் பாடசாலையும், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதன்போது மண்முனை தென் மேற்கு பிரதேசசபையிலிருந்து கொக்கட்டிச்சோலை சந்தி வரையில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் தரினம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தினை தொடர்ந்து மகிழடித்தீவில் உள்ள கலாசார மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வின்போது விழிப்புணர்வற்றோரின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றன.
கோரிக்கை முன்வைப்பு
அத்துடன் வெள்ளைப்பிரம்பின் முக்கியத்துவம் தொடர்பிலான பல்வேறு உரைகளும் நடைபெற்றதுடன் இதன்போது பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
விழிப்புலனற்றவர்கள் வீதிகளில் பயணிக்கும்போது தினமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக இங்கு கருத்து தெரிவித்த விழிப்புலனற்றவர்கள் தெரிவித்தனர்.
போக்குவரத்துச் செய்வதற்கான வீதிகளின் ஓரங்களில் வந்துநின்றால் எந்த போக்குவரத்து பேருந்துகளும் தங்களை கண்டுகொள்வதில்லையெனவும் வெள்ளைப்பிரம்புடன் நிற்பதைக்கண்டாலே ஏற்றாமல் செல்லும் நிலையே இன்றும் காணப்படுவதாகவும் அவ்வாறு ஏற்றிச்சென்றாலும் தங்களுக்கு முறையான மரியாதைகள் கிடைப்பதில்லையெனவும் கவலை தெரிவித்துள்ளனர்.












