வவுனியா மாநகர சபை மேயர் - பிரதி மேயருக்கு இடைக்கால தடை உத்தரவு
வவுனியா மாநகரசபையின் மேயராக சுந்தரலிங்கம் காண்டீபனும், துணை மேயராக பரமேசரன் கார்த்திபனும் அந்தப் பதவிகளை வகிப்பதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வவுனியா நகரசபை உறுப்பினர்களான கந்தையா விஜய குமார் மற்றும் சிவசுப்பிரமணியம் பிரேமதாச ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
மனு விசாரணை முடியும் வரை இந்த இடைக்காலத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மனுவை நவம்பர் 19 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேயர் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அந்தப் பதவிகளை வகிக்க போதுமான வாக்குகளைப் பெறவில்லை என்று மனுதாரர்கள் கூறுகின்றனர், அந்தப் பதவிகளை வகிக்க அவர்களுக்கு சட்டப்பூர்வ தகுதிகள் இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அவர்கள் அந்தப் பதவிகளை வகிப்பது சட்டத்திற்கு எதிரானது என்றும், அந்தப் பதவிகளை இரத்து செய்ய ஒரு சான்றளிப்பு ஆணையை வெளியிட வேண்டும் என்றும் மனு மேலும் கோருகிறது.
மனுதாரர் சார்பாக, சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று முன்னிலையாகி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




