சர்வதேச நிதி சந்தையில் தொடர்ந்தும் ஸ்திரமின்மை-டொலருக்கு பதிலாக மாற்று நாணயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் நாடுகள்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடிக்கு பின்னர் சர்வதேச நிதி சந்தையில் ஏற்பட்ட நிதி ஸ்திரமின்மை தற்போதைய உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக மேலும் உக்கிரமடைந்துள்ளது.
மாற்று நாணயங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ள நாடுகள்
இதற்கு மத்தியில் உக்ரைன்-ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் மற்றும் மேற்குலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக டொலருக்கு பதிலாக மாற்று நாணயங்களை பயன்படுத்தும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது.
சீனாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட வர்த்தக உடன்படிக்கைகளுக்கு அமைய சீனா, சவுதி அரேபியாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்யவும் சீன நாணயமான யுவானை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து ஏனைய நாடுகளும் சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. இதன் பிரதிபலனாக உலக சந்தையில் டொலர்களுக்கு எரிபொருளை விற்பது மற்றும் கொள்வனவு செய்வது உடனடியாக குறைந்துள்ளது.
மேலும் டொலர்களை பெற்றுக்கொண்டு எரிபொருளை விற்பனை செய்வதற்கு பதிலாக யுவான் நாணயத்தை பயன்படுத்தி அதன் ஊடாக நீண்டகால வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலைமை காரணமாக நாட்டுக்குள் டொலர் வருவது குறைந்துள்ளதால், அமெரிக்கா வட்டி வீதங்களை அதிகரித்துள்ளது.
மேலும் ரஷ்யா, சீனா, சவுதி அரேபியா, துருக்கி, ஈரான், இந்தியா போன்ற பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து வரும் நாடுகள், அமெரிக்க டொலருக்கு பதிலாக மாற்று நாணயத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.
இதன் பிரதிபலனாக சர்வதேச நிதி மற்றும் சர்வதேச வர்த்தக சந்தைகளில் டொலர் தொடர்பில் பாதிப்பான நிலைமை ஏற்பட்டு வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும்
இந்த நிலைமை காரணமாக டொலர் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரடையும் என நிதி ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர, “ நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நிலைமைகள் காரணமாக அமைந்துள்ளதாக நாங்கள் அரசாங்கத்திடம் அடிக்கடி சுட்டிக்காட்டினோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் போது இந்த விடயங்களை கவனத்தில் கொள்ளாது போனால், தீர்வு மேலும் தாமதமாகும். இது மாத்திரமல்ல நெருக்கடி மேலும் உக்கிரமடைய கூடும்.
இதனால், சர்வதேச நாணய நிதியத்தின் கானல் நீருக்கு பின்னால் செல்வதற்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெறவும் வர்த்தக கொடுக்கல், வாங்கல்கள் விரிவாக வரும் ஆகிய பொருளாதாரத்தை நோக்கி தாமதமின்றி கவனத்தை செலுத்துமாறும் நாங்கள் கோரிக்கை விடுத்தோம்.
எனினும் அரசாங்கம் செவிடன் காதில் ஊசிய சங்கு போல் செயற்பட்டு வருகிறது”எனக்கூறியுள்ளார்.