போலி ஊழியர்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் உதவியை நாடியுள்ள நாடாளுமன்ற படைக்கல சேவிதர்
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களாக, தம்மை அடையாளம் காட்டி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பேர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் மூவரும் திருகோணமலை தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ரி.எம்.ஷெரிப்புக்கு வேலை செய்வதாக கூறி அடையாள அட்டைகளை தயாரித்துள்ளனர்.
போலி ஊழியர்களாக ஏமாற்றல்

இந்நிலையில் நாடாளுமன்றில் ஷெரிப் என்ற உறுப்பினர்கள் எவரும் இல்லை. இந்த மூன்று சந்தேகநபர்களும் தங்களை, நாடாளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் செயலாளர் மற்றும் தனியார் தொடர்பு அதிகாரியாக காட்டிக்கொண்டுள்ளனர்.
மேலும், இவர்கள் கொரியாவிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் மோசடியில் ஈடுபட்டு
வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.