உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கைது
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று(7) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 50,000 ரூபாவினை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
கைது
இதனையடுத்து, பிலியந்தலைப் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் இன்று மதியம் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தெமட்டகொட- கொலன்னாவை வீதியில் இயங்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த ஆண்டுக்கான வரி விலக்கு அறிக்கையை வழங்குவதற்காக சந்தேக நபர் 100,000 ரூபாய் இலஞ்சம் கோரியிருந்தார். பின்னர், அந்தத் தொகை 50,000 ரூபாவாகக் குறைக்கப்பட்டு, கடந்த 3 ஆம் திகதி அவருக்கு 42,000 ரூபாய் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் இன்று மீதமுள்ள 8,000 ரூபாவை பெறச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
