அமில மழை தொடர்பில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் அமில மழை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இலங்கைத்தீவில் அமில மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதாக சமூக ஊடகங்களில் தவறான அறிக்கைகள் பதிவிடப்பட்டு வருவதாக வானிலை ஆய்வாளர் ஷானிகா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடர்பான விசாரணைகள், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளால் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
எம்.வி-எக்ஸ் பிரஸ் பேர்ல் என்ற கப்பல் எரியுண்டதால் நாட்டில் அமில மழை பெய்தமைக் குறித்து யாரும் வானிலை ஆய்வு மையத்துக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அமில மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கப்பலில் ஏற்பட்ட தீ நைட்ரஜன் ஒக்சைடை வளிமண்டலத்திற்கு தொடர்ந்து வெளியிட்டு வந்தது. எனவே, இந்த வாயுக்கள் நீர் துகள்களுடன் கலந்தால் அமில மழை பெய்யக்கூடும்.
இந்த மழை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பொதுமக்கள்
எச்சரிக்கையாக இருக்குமாறு அந்த அதிகாரி அறிவுறுத்தியதுடன், வாகனங்கள் மற்றும்
உலோக கட்டமைப்புகளை வெளிப்புறமாக மறைக்குமாறும் ஆணையத்தின் அதிகாரி ஆலோசனை
வழங்கியுள்ளார்.