பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் அடுத்தகட்ட நகர்வு குறித்து வெளியான தகவல்
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் உள்ளடக்கங்களின்படி, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதா அல்லது மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதா என்பதைத் தீர்மானிப்பது சட்டமா அதிபரின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறிவுசார் கலந்துரையாடலில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தடுப்பு மையங்களின் செயல்பாடு
1948 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பட்டலந்த ஆணைக்குழுவை அமைத்தார்.
இது, 1988-1990 காலகட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் தனிநபர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டது மற்றும் பட்டலந்த வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தடுப்பு மையங்களின் செயல்பாடு குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது.
விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி பல முறை நீடிப்புகளை வழங்கிய போதிலும், அறிக்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தக் குற்றங்கள் குறித்து அல் ஜசீரா ஊடகவியலாளர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியபோது, தொடர்புடைய ஆணையக அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர் பதிலளித்தார்.
இதனையடுத்து, இந்த அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் குறித்த அறிக்கையின் மூலம் யாரையும் நேரடியாக தண்டிக்க முடியாது. அதன் உள்ளடக்கங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாமா அல்லது மேலதிக விசாரணைகளை நடத்தலாமா என்பதை சட்டமா அதிபர் தீர்மானிக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியுமா..
மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்களைத் தவிர, மற்ற குற்றங்களுக்கு வரம்புகள் உள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் குற்றங்களுக்கு வழக்குத் தொடர முடியாது. என்ற சட்ட நிலைமையும் உள்ளது.
நடைமுறையில், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா, நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முடியுமா என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன.
அதேநேரம், கடத்தல் மற்றும் சித்திரவதை என்பன நீதிமன்றத்தில் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி; சாலிய பீரிஸ் விளக்கியுள்ளார்.
பட்டலந்த சித்திரவதை அறை இருந்ததற்கும், கடத்தல்களுக்கும் இன்னும் உயிருள்ள சான்றுகள் உள்ளன. தற்போது நீதிமன்ற செய்தியாளராக பணிபுரியும் ஆனந்த ஜெயக்கொடியும் கடத்தப்பட்டு பட்டலந்தயில் சித்திரவதை செய்யப்பட்டார்.
ஜெயக்கொடி 1988 செப்டம்பர் 6 ஆம் திகதியன்று கலகெடிஹேன சந்திப்பு பகுதியில் வைத்து கடத்தப்பட்டார். அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான ஏ.பி. கருணாரத்ன, பட்டலந்த சித்திரவதைக் கூடத்தில் ஆயுதக் கிடங்கிற்குப் பொறுப்பான ஒரு பொலிஸ் அதிகாரியாக இருந்தார்.
பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்ட நபர்கள்
இப்போது 96 வயதாகும் அவர், இந்தக் குற்றங்களில் தனக்கு இருந்த சிறிய ஈடுபாட்டை நினைவு கூர்ந்து இன்னும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளும், அவர்கள் பத்து அல்லது பதினைந்து துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார்கள். நான் அவற்றைப் பொறுப்பேற்று ஒவ்வொரு மாலையும் ஒப்படைத்தேன் என்று பட்டலந்தயின் முன்னாள் ஆயுதக் காப்பாளர் ஏ.பி. கருணாரத்ன கூறியுள்ளார்.
பட்டலந்தவுக்கு அழைத்து வரப்பட்ட நபர்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர்கள் வான்களிலும் ஜீப்களிலும் கொண்டு வரப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்
“இப்போதும் கூட, நான் மிகவும் துயரத்தை உணர்கிறேன். எங்களுக்கும் தாய்மார்கள் இருந்தார்கள். நான் தூங்கும்போது, என் கனவில் அவர்கள் அடித்து கொல்லப்படுவதைக் காண்கிறேன். கொஞ்சம் அமைதியைக் காண நான் ஒரு புத்தர் கோயிலைக் கட்டினேன். நான் இன்னும் சுதந்திரமாக இல்லை. என் கனவில் அவர்கள் என்னை வருமாறு அழைப்பதைப் பார்க்கிறேன்” என்று கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில், ஒரு தெளிவான நிலை கொண்டு வரப்பட வேண்டும். இந்த நாட்டை ஒரு புதிய அரசியல் கலாசாரமாக மாற்றும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது என்ற மருத்துவர் நவரட்ன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆணைக்குழு அறிக்கைகள் இந்த கலாசார மாற்றத்தின் மிக முக்கியமான அம்சத்தை நமக்குக் காட்டுகின்றன.
எனவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும். இது நாட்டின், கண்ணியம் மற்றும் மரியாதைக்கு அவசியம் என்றும் நவரட்ண பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 12 மணி நேரம் முன்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
