அரசாங்கத்தை கவிழ்க்கும் இடத்தில் ஒன்றுக்கூடிய மைத்திரி - சஜித் - விஜயதாச
நாட்டின் தற்போதைய அரசியலில் கடுமையான எதிர் நிலைப்பாடுகளை கொண்டு சில முக்கியஸ்தர்கள் நேற்று பேச்சுவார்த்தை ஒன்றுக்காக ஒரே மேசையில் அமர்ந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள். இவர்களை தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
எவ்வாறாயினும் ஆளும் கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த எந்த முக்கியஸ்தரும் இதில் கலந்துக்கொள்ளவில்லை.
பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டவர்கள் மாத்திரமல்ல பேச்சுவார்த்தை இடம்பெற்ற இடமும் முக்கியத்துவம் மிக்கது. அது அரசாங்கத்தை கவிழ்க்கும் இடம் என்ற வகையில் பிரசித்தி பெற்ற இடமாகும்.
சர்வக்கட்சி கூட்டம் என கூறப்பட்டு இந்த பேச்சுவார்த்தையானது, நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அன்று கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் ராஜபக்ச அணியினர் அரசியல் பேச்சுவார்த்தைகளுக்காக பயன்படுத்திய நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்றது.
நாட்டின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான தீர்வை காணும் நோக்கில் இந்த சர்வக்கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல்வாதி இல்லை என்றாலும் இலங்கையின் அரசியலில் நேரடியான அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடியவர் எனக் கூறப்படும் அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார்.
தமது விகாரைக்கு ஒரே நேரத்தில் அதிகளவான கட்சித் தலைவர்கள் வந்த முதல் சந்தர்ப்பம் இது என ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அபயராம விகாரையில் இந்த கூட்டம் நடைபெறுவதை அறிந்துக்கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தன்னை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு அது குறித்து விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்ச முகாமின் முக்கிய மற்றும் செயற்பட்டு ரீதியான உறுப்பினராக இருந்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், சில காலமாக தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றார். சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்ற அரசாங்கத்தில் உயர் மட்டத் தலைவர்களையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.
அண்மையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டிருந்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக மக்கள் தேர்தல் ஒன்று வரும் வரை காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அபயராம விகாரையிலேயே கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.