தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விபத்தில் சிக்கி பலி
கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹெச். எம். சரத் விஜேசேன (63) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஓய்வுபெற்ற பிரிகேடியரே சமப்வத்தில் உயிரிழந்துள்ளார். இவர் பன்னிப்பிட்டிய – மாகும்புர பகுதியில் வசித்து வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த ஓய்வுபெற்ற கர்னல் ஒருவர், இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வணிக தேவைக்காக காலி நோக்கி, பண்டாரகம–கெஸ்பேவ பிரதான சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெல்மில்ல, கல்கடே சந்தியில், ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் ஊழியர்களை மாத்துகம நோக்கி கொண்டு சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதே விபத்துக்குக் காரணமாகும்.
மோதலின் பின்னர், மோட்டார் சைக்கிள் சுமார் 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் செல்லப்பட்டு, சாலையில் நின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய தனியார் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம காவல்துறை மேற்கொண்டு வருகிறது.