இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்குமாறு, வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் நட்ராஜ் ஜெய்பாஸ்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களம் இணைந்து நடாத்தும் சித்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் சங்கானை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
"ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் சித்த மருத்துவம்" எனும் தொனிப்பொருளில் குறித்த மருத்துவ முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது நோயாளிகளுக்கான இரத்த பரிசோதனை, மருந்துகள் வழங்கல் உள்ளிட்ட பல இதர
சேவைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது உரையாற்றிய வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் அத்துமீறி எமது நாட்டின் கடல் எல்லைக்குள் உட்புகுந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் எமது நாட்டின் கடல் வளங்கள் அருகி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் எமது நாட்டு மீனவர்களின் தொழில் முதல்கள் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளில் சிக்குண்டு சேதமடைகின்றன. இதனால் இலங்கை மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் இதுவரை எமது மீனவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மீனவர்கள் தொழிலை கைவிடும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினை இன்று நேற்று மட்டும் இடம்பெறவில்லை, அன்று தொடக்கம் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது.
இந்திய இழுவைப் படகுகளால் அதிகம் பாதிக்கப்படுவது நமது வடபகுதி மீனவர்களே. தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஒரு நல்லெண்ணம் ஏற்பட வாய்ப்புகள் கிடையாது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் யாழ். இந்திய துணைத்தூதுவர் சிறீமான் நடராஜ் ஜெய் பாஸ்கர், வைத்திய கலாநிதி ஜெபநாம கணேசன், வடமாகாண சித்த மருத்துவ திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாண சுகாதார சுதேச அமைச்சின் செயலாளர், வலி. மேற்கு பிரதேசசபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், உப பிரதேச செயலாளர் திருமதி செந்தூரன், சித்த வைத்திய அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சித்த வைத்திய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








