வடக்கு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகளின் அத்துமீறல்
வடக்கு கடற்பரப்பான சுண்டிக்குளம் - மாத்தளன் கடற்பரப்புகளில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
இலங்கையில் கடற்பரப்புகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்கிறார்கள்.
அத்துமீறிய செயல்
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கொள்ள நினைத்த இந்திய இழுவைமடி கடற்றொழிலாளர்கள், சுண்டிக்குளம், மாத்தளன் கடற்பரப்பிற்கு ஒரு கிலோமீட்டர் கரைக்கு அண்ணளவாக வருகை தந்து அச்சமின்றி இழுவைமடி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

வடக்கு கடலில் தற்போது இறால் சீசன் என்பதால் அதனை அறிந்து கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்துச் செல்கின்றார்கள் என அதனை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளதாக செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுண்டிக்குளம் மற்றும் சாலை பகுதியில் இலங்கை கடற்படையின் மிகப்பெரிய கடற்படை தளங்கள் அமைந்திருக்கின்ற போதிலும், கடற்படை தளத்திற்கு அண்மையாக வந்து இந்திய இழுவைமடி படகுகள் எந்தவித பயமுமின்றி தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதனால் வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்களின் நீண்டகால கோரிக்கைக்கு இதுவரை எந்தவொரு அரசும் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
