இலங்கைக்கு உதவி அனுப்பிய தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்
இலங்கையில் அண்மையில் வீசிய 'டிட்வா' புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களின் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
20 அடி நீளமுள்ள இரண்டு கொள்கலன்கள் நிறைய அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் மற்றும் 4.2 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 12.33 இலட்சம் இந்திய ரூபாய்) நிதி உதவியை அவர்கள் வழங்கியுள்ளனர்.
இந்தப் பொருட்கள் மற்றும் நிதி, சென்னையில் உள்ள இலங்கைத் துணை உயர்ஸ்தானிகரத்திடம் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது உத்தியோகபூர்வ வழிகள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
உருக்கமான கருத்து
இந்த மனிதாபிமான உதவி குறித்து ஈரோடு பவானிசாகர் முகாமைச் சேர்ந்த அந்தோணி ரெஜினால்ட் கூறுகையில், "நாங்கள் இந்தியா வந்து 35 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், எங்கள் தாய்நாட்டின் மீதான பற்றும் அன்பும் குறையவில்லை; அங்குள்ள மக்கள் படும் துயரம் எங்களை ஆழமாகப் பாதிக்கிறது" என்று உருக்கமாகத் தெரிவித்தார்.

அதேபோல், "நாங்கள் இங்கு ஆடம்பரமான வாழ்க்கை வாழவில்லை என்றாலும், எங்களால் முடிந்த உதவியை எங்கள் உறவுகளுக்குச் செய்ய விரும்பினோம்" என்று சேலம் நாகியம்பட்டி முகாமைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே வசித்து வருகின்றனர்.
தாங்களும் பொருளாதார ரீதியாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தங்களின் ஒரு பகுதி சேமிப்பைத் திரட்டி தாய்நாட்டிற்கு வழங்கியிருப்பது அனைவரது நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ரூ.2.35 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க கிரீடம்: புகைப்படம் எடுக்க முயன்று தட்டிவிட்ட சிறுவன்: வீடியோ News Lankasri