மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் எனப்படும் H5N1 வைரஸ், எதிர்காலத்தில் மனிதர்களிடையே பரவி உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அசோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பிலிப் செரியன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் மேற்கொண்ட புதிய ஆய்வில், ஒருவேளை இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவத் தொடங்கினால், அதை எப்படி ஆரம்பகட்டத்திலேயே கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
இந்த ஆய்வுக்காகத் தமிழ் நாட்டின் கோழி பண்ணை தொழிலுக்குப் புகழ்பெற்ற நாமக்கல் மாவட்டத்தின் ஒரு கிராமம் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுமார் 9000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஒரு செயற்கைச் சமூகத்தை உருவாக்கி, அதில் வைரஸ் எப்படிப் பரவுகிறது என்பதைக் கணினி உருவகப்படுத்துதல் (Simulation) மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்படி, ஒரு கோழிப்பண்ணைத் தொழிலாளி அல்லது பறவைகளைக் கையாள்பவரிடமிருந்து தொடங்கும் தொற்று, குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்கள் வழியாகச் சமூகத்தில் பரவுகிறது.
தீவிர நடவடிக்கை
ஒரு பகுதியில் வைரஸ் பாதிப்பு 2 முதல் 10 பேருக்குள் இருக்கும் போதே, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் தனிமைப்படுத்தி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே பரவலைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஐத் தாண்டிவிட்டால், வைரஸ் சமூகத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் பரவிவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும்.
பறவைகளை அழித்தல் (Culling) போன்ற நடவடிக்கைகள், வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதற்கு முன்னதாக செய்யப்பட்டால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
உயிரிழப்பு
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, 2003 முதல் 2025 வரை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 48 சதவீதமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் மனிதர்களுக்குப் பரவும் ஆபத்து குறைவாக இருந்தாலும், வைரஸ் உருமாற்றம் அடைந்து எளிதாகப் பரவ வாய்ப்புள்ளதால், பொது சுகாதாரத் துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
முன்கூட்டியே திட்டமிடுதல், முறையான கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் எடுக்கப்படும் தனிமைப்படுத்துதல் நடவடிக்கைகள் மூலமே ஒரு பெரும் பெருந்தொற்றைத் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam