கனடாவில் இந்திய உணவக உரிமையாளர் கொல்லப்பட்ட வழக்கு - குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரித்தானியர்கள்
கனடாவில் ஹோட்டல் பில் (உணவுக் கட்டணம்) செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இந்திய உணவக உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரித்தானியாவைச் சேர்ந்த மூன்று பேர் தங்கள் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த 2023 ஓகஸ்ட் மாதம், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 'ஓவன் சவுண்ட்' நகரில் 'கறி ஹவுஸ்' என்ற இந்திய உணவகத்தை ஷெரீப் ரஹ்மான் (44) என்பவர் நடத்தி வந்தார்.
அப்போது அங்கு சாப்பிட வந்த பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த ராபர்ட் எவன்ஸ் ஜூனியர் (25), அவரது தந்தை ராபர்ட் பஸ்பி எவன்ஸ் (49) மற்றும் மாமா பாரி எவன்ஸ் (56) ஆகியோர் 150 டொலர் (சுமார் 79 பவுண்ட்) உணவுக் கட்டணத்தைச் செலுத்தாமல் கிளம்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உணவகத்திற்கு வெளியே தெருவில் வைத்து இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த ஷெரீப் ரஹ்மான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் உயிரிழந்தார்.
நீதிமன்ற விசாரணை
சுற்றுலா விசாவில் கனடா வந்திருந்த இந்த மூன்று பேரும், இச்சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக பிரிட்டனுக்குத் தப்பி ஓடினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு, சட்டப் போராட்டத்திற்குப் பின் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது, ராபர்ட் எவன்ஸ் ஜூனியர் தான் ஷெரீப் ரஹ்மானைக் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இவருக்கான தண்டனை விவரம் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது.
அதே வேளையில், இக்கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மற்றும் மாமா ஆகிய இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தையே தண்டனையாகக் கருதி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
தற்பொழுது அவர்கள் இருவரையும் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்புவதற்காகக் கனடா எல்லை பாதுகாப்பு முகமையினர் தங்களது காவலில் எடுத்துள்ளனர்.