நடிகர் விஜய் பிரபல அரசியல்வாதியா.....! அநுரவின் அவசர விஜயம்..!
கடந்த சில வாரங்களாக இலங்கை மற்றும் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட விடயமாக கச்சத்தீவு மீட்பு மாறியிருந்தது.
பிரபல நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய், தேர்தலில் வெற்றி பெற்றால் கச்சத்தீவை மீட்கப் போவதாக பிரசார மாநாடு ஒன்றில் சூளுரைத்திருந்தார்.
இந்த விடயம் தென்னிலங்கையில் அதிகம் பேசப்படும் அரசியல் பிரலயமாக மாறியிருந்தது.
அரசியல்வாதிகள் உட்பட சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரும் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜயை கடுமையாக சாடியிருந்தனர்.
கச்சத்தீவு மீட்பு
கச்சத்தீவு மீட்பு தொடர்பான நிலைப்பாட்டுக்கு விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் சிங்களவர்கள் கொந்தளித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதற்கு மேல் சென்ற சமகால அரசாங்கம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என நிரூபிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, நடிகர் விஜயை மேலும் பேசும்பொருளாக மாற்றியிருந்தனர்.
விஜயின் கூற்றுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேரடியாகவே கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை வரலாற்றில் கச்சத்தீவு சென்ற ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க மாறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜயின் கருத்திற்கு இலங்கை அரசாங்கம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கருத்து தற்போது வலுப்பெற்றுள்ளது.
தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு
தமிழகத்தில் தேர்தல் வரும் காலங்களில் கச்சத்தீவு மீட்பு விடயத்தை பெரும் பூதாகரமான விடயமாக மாறி அரசியல்வாதிகளால் பேசப்படுவது வழமையான ஒன்றாகும்.
இது காலகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடாக அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நடிகர் விஜயும் அந்த யுக்தியை கையாண்டு வருகிறார்.
சினிமாவில் உச்சம் தொட்ட நடிகரான விஜய், அரசியலில் வெறும் கத்துக்குட்டியாகவே உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியுடன் அடுத்தாண்டு தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
இவ்வாறான நிலையில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு கூட தாக்கல் செய்யாத பெயரளவிலான முதன்மை வேட்பாளரான விஜய்க்கு, இலங்கை அரசாங்கம் இவ்வளவு தூரம் பதிலளிக்க வேண்டுமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
2026 ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தவெக கட்சியின் வெற்றி மிகவும் குறைவு என்றும் எனினும் கணிசமான வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இலங்கை
இவ்வாறான நிலையில் ஒருவேளை முதலமைச்சராக ஜோசப் விஜய் வெற்றிபெற்றால், கச்சத்தீவு மீட்பு என்பது சாத்தியமா என கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், தமிழகத்தின் எந்தவொரு கட்சி நினைத்தாலும் அது சாத்தியமற்ற ஒன்றே. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழகம் நினைத்தால் அது முடியாத விடயமாகும். இது இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு உட்பட்டது. மத்திய அரசாங்கம் நினைத்தால் மட்டுமே கச்சத்தீவு மீட்பு சாத்தியமான விடயமாகும்.
இவ்வாறான நிலையில் இந்திய மத்திய அரசாங்கத்தினால் இலங்கையை மீறி கச்சத்தீவை மீட்க முடியமா என்றால், அது முடியாத ஒரு இடியப்ப சிக்கல் நிறைந்த ஒன்றாகும்.
பூகோள அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இலங்கை உள்ளது. இந்தியா, சீனா, அமெரிக்கா என பலம்பொருந்திய நாடுகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இலங்கையை வைத்திருக்க பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
எனினும் பிராந்திய ராஜதந்திர ரீதியில் இந்தியாவின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இலங்கை உள்ளது என்பது தற்போதைய நிலையாகும். இதுவே இந்தியாவுக்கும் அதன் தேசிய பாதுகாப்புக்கு உகந்த ஒன்றாகும்.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு எதிராக கச்சத்தீவை மீட்க நினைத்தால், சீனாவுக்கு பெரும் சாதகமான ஒன்றாக மாறும். அது இந்திய பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலான ஒன்றாக மாறும்.
இவ்வாறான நிலையில் இலங்கை, இந்தியா என்றும் அண்ணன் - தம்பி உறவாக நீடிக்கும். இவ்வாறான நிலையில் கச்சத்தீவை மீட்கும் நிலைப்பாட்டில் இந்தியா என்றும் இருக்காது என்பதே யதார்த்தமான அரசியல் நிலைப்பாடாகும்.
இதனை புரிந்து கொள்ள முடியாத தமிழக அரசியல் தலைவர்கள் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்ள கச்சத்தீவை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



