அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய தமிழர் தொடர்பில் வெளியான பின்னணி
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
தற்போது இந்த வரிசையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என டிரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளமை அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையில் போட்டியிடும் தமிழர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த விவேக் ராமசாமி
மருந்து நிறுவனத்தை நடத்தி வரும் 37 வயதான விவேக் ராமசாமி சிறந்த தொழிலதிபர் என்பதுடன், அவரின் சொத்து மதிப்பு ரூ.4,140 கோடி என்று கூறப்படுகின்றது.
பாலக்காடு பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய விவேக்கின் தந்தை ராமசாமி General Electric நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.தாயார் முதியோர் மனநல மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
1985ல் ஓஹியோவின் சின்சினாட்டி பகுதியில் பிறந்த விவேக், 2003 ல் உயர்நிலைப் பள்ளி படிப்பில் சாதனை படைத்ததுடன், தேசிய அளவில் இளையோருக்கான டென்னிஸ் வீரர் தரவரிசையிலும் இடம் பெற்றார். 2007 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பை முடித்த விவேக், 2013ல் யேல் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்க தேசியவாதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவருக்கு குடியரசு கட்சியில் நல்ல செல்வாக்கு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திட்டமிடல்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் கீதா தம்பதியின் இரு மகன்களில் ஒருவரான விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
டென்னிஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட விவேக், கொரோனா பெருந்தொற்றின் போது சில மாத காலம் முழு நேர தந்தையாக செயல்பட்டேன் என்பதை வேடிக்கையாக கூறியுள்ளார்.
அந்த வேளையில்,இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான விவேக் ராமசாமி தனது மனைவி நியூயார்க் மருத்துவமனையில் பணியாற்றும் சூழல். நாடு எதிர்கொள்ளும் சவால்களை குடியரசுக் கட்சியின் இன்னொரு வேட்பாளரான டொனால்டு ட்ரம்பால் சமாளிக்க முடியாது எனவும், அதற்கான திட்டமிடல் அவரிடம் இல்லை எனவும் விவேக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.