கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் இந்திய மருத்துவ கழிவுப்பொருட்கள்
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கடற்கரை ஓரங்களில் இன்றைய தினம் மருத்துவ பொருட்கள் சில கரை ஒதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்கள் அதனை சேகரித்ததோடு ,உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த கடற்கரையோரங்களில் கிரீம்கள்,ட்யூப்கள்,மாத்திரை பைக்கற்றுகள், பாவிக்கப்பட்ட ஊசிகள் போன்றவற்றை இவ்வாறு கரையொதுங்கியுள்ளன.
இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மருத்துவ கழிவு பொருட்கள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பாக மன்னார் மாவட்ட கடற்தொழில் பரிசோதகர் என்.பவநிதியை தொடர்பு கொண்டு கேட்ட போது,
இந்த மருத்துவ கழிவு பொருட்களுக்கும் கொழும்பில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து வெளி வரும் கழிவுப் பொருட்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.
குறித்த மருத்துவ கழிவு பொருட்களை கடற்கரை தூய்மையாக்கள் பிரிவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவை இந்தியாவின் மருத்துவ கழிவு பொருட்கள். தற்போது தமிழ் நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருவதால் இவ்வாறான கழிவு பொருட்கள் மன்னார் மாவட்ட கடற்கரையோரங்களில் கரையொதுங்குகிறது. மீனவர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் என்.பவநிதி தெரிவித்துள்ளார்.


