இந்திய போதைப்பொருள் வலையமைப்பு! 6 சந்தேகநபர்கள் கொழும்பில் கைது
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களான இரண்டு சகோதரர்களின் போதைப்பொருள் வலையமைப்பை இலங்கையில் நடத்தியதாகக் கூறப்படும் ஆறு இளைஞர்களை பொலிஸ் சிறப்புப் படை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி, கொழும்பின் ஜம்பட்டா வீதி மற்றும் ஆர்மர் வீதி பகுதிகளில் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் ரூ. 2.5 மில்லியன் பெறுமதியான 'ஐஸ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களின் ஒரு பங்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விசாரணை
இந்த மோசடியின் மூளையாக செயல்பட்ட பழனி ரிமோஷன் மற்றும் பழனி ஷிரான் ஆகியோர் இந்தியாவில் உள்ள ஒரு திறந்தவெளி சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் விசாரணைகளில் இருந்து அவர்கள் இந்த இளைஞர்களைப் பயன்படுத்தி தங்கள் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் ஒரு குற்றத்திற்காக விளக்கமறியலில் இருந்தபோது தப்பிச் சென்றவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பாதாள உலக கும்பல்
மேலும் குறித்த சந்தேகநபர் பாதாள உலகக் கும்பலில் தீவிரமாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்துபவர் என்ற தகவல் கிடைத்துள்ளதால், சிறப்புப் படை அது குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் இந்த இளைஞர்கள் சம்பாதித்த பணம் இந்தியாவில் உள்ள இரண்டு சகோதரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் சிறப்பு படை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



