இலங்கைத் தமிழ் பெண்ணின் குடியுரிமை தொடர்பில் இந்திய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குடியுரிமை கோரி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்துக்கு சென்னை மேல்நீதிமன்றின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து தகுதி அடிப்படையில் உத்தரவுகளை 12 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உள்துறை அமைச்சகத்தின் செயலாளருக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இந்திய வம்சாவளித்தமிழ் பெண் 1984 ஆம் ஆண்டு 9 வயதாக இருந்தபோது இந்தியா வந்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டு இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்ததாகக் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு குடிபெயர்வு
இனக்கலவரத்தைத் தொடர்ந்து, அவர் 1984 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இலங்கையில் வழங்கப்பட்ட தனது தந்தையின் அடையாளச் சான்றிதழ் மூலம் அவரது குடம்பம் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.
அத்துடன், திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டில் உள்ள போக்குவரத்து முகாமில் உள்ள சிறப்பு துணை ஆட்சியர் அலுவலகத்தில் அந்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அப்போதிருந்து குறித்த இலங்கை வம்சாவளித் தமிழர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கும் நோக்கத்துடன் வசித்து வருகிறார்.
இந்திய வம்சாவளி
தனது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் என்றும், எனினும் அவர்கள் இலங்கையில் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடற்றவர்களாக வாழ்ந்ததாகவும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டில், குடியுரிமைச் சட்டத்தின் படி, தாம், பதிவு மூலம் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோதும்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் அமைதியாக வசித்து வருவதாகவும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்கியதாகவும் கூறியுள்ள மனுதாரர், தனது இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |