இலங்கை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைத்த தமிழக பயணி - பகிரங்க மன்னிப்பு கோரல்
அண்மையில் இலங்கை ஊடாக தமிழ்நாட்டுக்கு பயணமான பயணி ஒருவர் வெளியிட்ட கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த நபர் இன்றையதினம் இலங்கை மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாரிய பேரிடர் ஏற்பட்டிருந்த அன்று, மத்திய கிழக்கு நாட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமிழ்நாட்டுக்கு சென்ற பயணி இருவர்கள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என்றும் இலங்கைக்கு மீண்டும் வரப் போவதில்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.
கடும் சூறாவளி
நாட்டில் பெரும் வெள்ள ஏற்பட்டிருந்த நிலையிலும், கடும் சூறாவளி காற்று வீசிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்த விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இதன்போது விமானத்தில் வந்த பயணிகளை உரிய முறையில் விமான நிலையமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனமும் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தனர்.
எனினும் மூன்று நாட்களின் பின்னர் இந்திய விமானங்கள் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது அங்கிருந்து ஊடகங்கள் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருந்தனர்.
கடும் அதிருப்தி
இந்நிலையில் குறித்த இரண்டு பயணிகள் மீதும் தமிழக மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். நாட்டில் பெரும் அவலம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட நாடுகள் சென்று உதவிகளை வழங்கி வருகின்றன.

இவ்வாறான நிலையில், விமான நிலையத்தில் முறையாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனையடுத்து குறித்த இரண்டு பயணிகளில் ஒருவர், நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தெரியாமல் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளதாக மன்னிப்பு கோரியுள்ளார்.
அத்துடன் புயலின் காரணமாக இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.