அரசு தரப்பில் இரு நாட்டு அதிகாரிகளுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்புக்கள்
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.
நேற்று (22) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, வடக்கு கடலில் நிலவும் கடற்றொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இரண்டு தரப்பினரும் நீண்டகால தீர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
முக்கிய விடயங்கள்
அத்துடன், இது இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் அதேவேளையில் ஒத்துழைப்பை வளர்க்கும் என்பதை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட தற்போதைய திட்டங்கள் பற்றிய மீளாய்வும், இருதரப்பும் தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதுடன் இந்தியக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் நோக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சீனத் தூதரகத்தின் பிரதித் தலைவர் சூ யென்வெய், நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக குமாநாயக்கவை சந்தித்திருந்தார்.
இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் அவர்கள் இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |