பிறிக்ஸ் மாநாடும் இலங்கையை கையாள முற்படும் இந்தியாவும்
அமெரிக்கா - சீனா, அமெரிக்கா - ரஷ்யா உறவுகள் இந்திய - சீனா உறவுகளுக்கான சூழலை மாற்றியுள்ளதாக புதுடில்லியைத் தளமாகக் கொண்ட மூலோபாய விவகார நிபுணரான ஜோராவர் தௌலெட் சிங் வலியுறுத்துகிறார்.
மேற்குலகின் கூட்டு மற்றும் மேற்கின் மதிப்பிழந்த நவதாராளவாத பூகோளவாத சித்தாந்தத்தில் தொகுக்கப்படாத பல்முனை, பல நாகரீக உலக ஒழுங்கு, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பிற்கான அடிப்படையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொடோன்டிப்ளோமேசி (moderndiplomacy) என்ற ஆங்கில செய்தி இணையத்தளத்தில் 'இந்தியா, சீனா மற்றும் ஒரு புதிய பல்முனை, பல நாகரிக உலகம்' என்ற தலைப்பில் இன்று புதன்கிழமை இருபத்து ஆறாம் திகதி வெளியான செய்திக் கட்டுரையிலேயே இவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது.
பிரேசில், ரசியா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்க ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய பிறிக்ஸ் கூட்டமைப்பின் பதினைந்தாவது மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா அதற்குரிய முக்கிய நகர்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இப் பின்னணியிலேயே இக் கட்டுரை வெளியாகியுள்ளது.
வலுப்படுத்தப்படும் மூலோபாய ஒருங்கிணைப்பு
தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி புடின் பங்கேற்கும் வாய்ப்புகள் இல்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தென்னாபிரிக்காவும் ஒரு காரணம்.
அதனாலேயே அங்கு நடைபெறவுள்ள பிறிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ஜனாதிபதி புடின் விரும்பவில்லை என்று ரஷ்ய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தியா - ரஷ்ய கூட்டுச் செயற்பாடுகள் காரணமாகப் புதுடில்லி பிறிக்ஸ் மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சென்ற செவ்வாய்க்கிழமை 25 ஆம் திகதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட சீன மூத்த தூதர் வாங் யீ, பத்து ஆண்டுகளுக்கும் மேலான வளர்ச்சிக்குப் பின்னர் வளர்ந்து வரும் சந்தை நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் ஒன்றிணைந்த சுய வளர்ச்சிக்கான முக்கிய தளமாக பிறிக்ஸ் மாறியுள்ளது என்றார்.
பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். பிராந்திய பொருளாதார பாதுகாப்புப் பற்றியே சீன மூத்த தூதர் வாங் யீயின் கருத்து அமைந்திருந்தது.
'வளர்முக நாடுகளின் சைபர் பாதுகாப்பு முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அந்தப் பாதுகாப்புக்கு ஏற்படும் சவால்கள் என்ற தலைப்பில் சென்ற திங்கட்கிழமை 24 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில், தென்னாபிரிக்க அமைச்சர் கொகும்புசோ நற்ஷவாகினி (Khumbudzo Ntshavheni) பிரேசில் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் செல்சோ லூயிஸ், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பேரவையின் செயலாளர் நிக்கோலி பர்றுசோவ் (Nikolai Patrushev) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோர் உட்பட வேறு பல நாடுகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் ஒரு நூற்றாண்டில் காணப்படாத கடுமையான உலகளாவிய மாற்றங்களின் பின்னணியில், வளரும் நாடுகளின் நிலையான மற்றும் பாதுகாப்பான உத்வேகத்தைச் செலுத்த முற்படுகின்றமை பற்றி கூட்டத்தில் ஆராயப்பட்டிருக்கிறது.
சீன - இந்திய அரசு
குறிப்பாக பொருளாதாரம் அதற்குரிய பாதுகாப்பு விவகாரங்களில் தெற்காசியாவில் இலங்கை போன்ற சிறிய நாடுகளைக் கையாள்வது பற்றியும் சிறிய நாடுகளின் ஒத்துழைப்புகளைப் பெறுவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டிருக்கிறது.
இது பற்றிய இந்திய - சீன அரசுகளின் கருத்துக்களுக்கே இக் கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. ரஷ்யா - இந்திய உறவு மற்றும் ரசிய - சீன உறவுகள் ஆசியப் பிராந்தியத்தில் செலுத்தக்கூடிய தாக்கங்கள் குறிப்பாக பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் அமெரிக்கா போன்ற மேற்கத்தை மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தாக்கங்கள் பற்றி ஆராயப்பட்டிருக்கின்றன.
இப் பின்னணியில் இந்திய சீன வர்த்தக உறவு பலப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகளவில் உண்டு. சீனாவுடன் பொருளாதார உறவைச் சமநிலையில் வைத்திருப்பதால் இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் இராணு ரீதியான உறவைப் பலப்படுத்த முடியுமென இந்தியா நம்புகிறது.
ஆனால் சீன - இந்திய எல்லை விவகாரத்தில் இந்தியாவுடன் முரண்பாடு தொடருவதாகவே சீனாவின் குளோபல் ரைம்ஸ் கூறுகிறது. இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் மாத்திரமே போட்டி என்றும் இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினை மாத்திரமே இருப்பதாகவும் குளோபல் ரைமஸ் கிண்டலாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே பொருளாதார உறவின் மூலம் இராணுவச் செயற்பாடுகளை இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் குறைத்துக் கொள்வது பற்றிய யோசனைகள் இருந்தாலும், அதனை பிறிக்ஸ் மாநாட்டின் மூலம் சாத்தியப்படுத்த இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெற்றியளிக்கும் நிலையில் இருப்பதாகக் கூற முடியாது.
இப் பின்னணியிலேயே தெற்காசியாவில் உள்ள இலங்கை போன்ற சிறிய நாடுகளைப் பொருளாதார ரீதியாகக் கையாளக்கூடிய அரசியல் உத்திகளை சீன - இந்திய அரசுகள் மிகச் சமீபகாலமாக ஏட்டிக்குப் போட்டியாக வகுத்து வருகின்றன.
பிறிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி பங்கொள்ள மறுப்பதால் பிறிக்சின் பொருளாதார முன்னேற்பாடுகளை இந்தியா நுட்பமாக கையாளக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. இந்திய ரூபாவை ரஷ்யா ஒத்துழைப்புடன் சர்வதேசச் சந்தையில் பயன்படுத்துவது பற்றிய விதப்புரைகளுக்கு மத்தியில் பிறிக்ஸ் மாநாட்டில் சாதகமான முடிவை எடுக்க இந்தியா விரும்புகிறது.
குறிப்பாகச் சீனாவை நோக்கி முரண்பாட்டில் உடன்பாடு என்ற கோட்பாட்டுக்கு இந்தியா சமிக்ஞை காட்டுகிறது போல் தெரிகிறது. இப் பின்புலங்களை அறிந்தே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய உறவை விரைவாக நகர்த்தத் துணிந்துள்ளார்.
குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தங்களைத் தவிர்த்து, பதின்மூன்றாவது திருத்த சட்டம் பற்றிப் பேசாமல் இலங்கை ஒற்றையாட்சி முறையை மேலும் பலப்படுத்தவே ரணில் முற்படுகிறார் என்பது பட்டவர்த்தனம்.
இந்தோ - பசுபிக் விவகாரம்
இதன் காரணமாகவே பிறிக்ஸ் மாநாட்டுக்கான இந்தியக் காய் நகர்த்தலுக்கு ஏற்ப பயணிக்கும் புதிய உத்தியை ரணில் பரிசோதிக்க ஆரம்பித்திருக்கிறார் போலும். ரணில் டில்லியில் நடத்திய சந்திப்புகள் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை அவதானித்தால் இது புரியும். விரும்பியோ, விரும்பாமலோ ரணில் தற்போது இந்தியாவுடன் நிற்கின்றார் என்பது தெரிகிறது.
சீனாவுடன் பகைக்காமல் பிறிக்ஸ் அமைப்போடு சேர்ந்து பயணிப்பதன் மூலம் இலங்கைக்குரிய நலன்களைப் பெறுவதில் ரணில் ஆர்வமாக இருக்கிறார். ஏனென்றால், ரணிலுக்கு சீனா தேவைப்படுகின்றது. பிறிக்ஸ் அமைப்பில் இந்தியா நிற்கின்ற காரணத்தால், அது தொடர்பாக இந்தியா பெரிதாக கருத்தில் கொள்ளாது.
அதாவது பொருளாதார உதவிகளைச் சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொள்வதில் இந்தியாவிற்குச் சிக்கல் இருக்காது என்று ரணில் நம்புகிறார். ஆனாலும், இந்தோ - பசுபிக் விவகாரத்தில் மாத்திரம் "இந்தியாவுடன் நில்" என்ற கோணத்தில் இந்தியா சில நிபந்தணைகளைப் புதுடில்லியில் வைத்து ரணிலிடம் கூறியிருக்க வாய்ப்புண்டு.
இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுடன்தான் நிற்கும். சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கும் அமெரிக்கா தேவை. ஆகவே ஒன்றுக்கொன்று தங்கி வாழும் அணுகுமுறையில் மாற்றம் இருக்காது.
ஆனாலும், ரசிய - உக்ரெயன் போரினால் ஏற்பட்டுள்ள அமெரிக்க - இந்திய பனிப் போரை இலங்கை கன கச்சிதமாகக் கையாளுகின்றது. இந்தோ - பசுபிக் பிராந்திய புவிசார் அரசியல் பொருளாதாரப் போட்டிகளை இலங்கையின் அரசியல் - பொருளாதார நலன்களுக்கு ஏற்ப ரணில் பயன்படுத்துகிறார்.
ரணில் விக்ரமசிங்க, இந்தியாவைக் கடந்து, சீனாவுடனும், அமெரிக்காவுடனும் சமாந்தரமாகப் பயணிக்கக்கூடியவர். அது இந்தியாவிற்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே, இலங்கையை இந்தியா கொஞ்சம் விட்டுப் பிடிக்கிறது என்றுகூடச் சொல்லாம். குறிப்பாகச் சீனாவிடமிருந்து இலங்கை உதவி பெறலாம்.
ஆனால், அமெரிக்காவிடம் இலங்கை முழுமையாகச் சென்றுவிடக் கூடாதென்பதில் இந்தியா மிகக் கவனமாக இயங்குகிறது. அமெரிக்காவின் பக்கம் இலங்கை முழுமையாகச் செல்வதை இந்தியா விரும்பாது. பிறிக்ஸ் அமைப்பில் இலங்கை இல்லை. ஆனாலும், பிறிக்ஸ் கொள்கைகளுடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு திட்டத்தை ரணில் தற்போது பரிசீலிப்பதற்கு இந்தியாவே காரணம் எனலாம்.
இலங்கையில், இந்தியாவுக்குத் தேவையானதை ரணில் செய்து கொடுக்கின்றார். அதற்குப் பதிலாகப் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இந்தியா கைவிட வேண்டுமென ரணில் விரும்புகிறார். இது பற்றி புதுடில்லியில் உரையாடியிருக்கலாம்.
ஏனெனில் பதின்மூன்றை ரத்துச் செய்ய வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர் மிலிந்த மொகொட புதுடில்லியில் இலங்கைத் தூதுவராக இருந்து கொண்டு அதற்குரிய வேலைத் திட்டங்களை நகர்த்துகிறார்.
ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு
ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் கொள்கையை தமிழ் நாட்டு அரசும் ஏற்க வேண்டும் என்ற கருத்தியலை மிலிந்த மொறகொட சென்னையில் திராவிடக் கட்சிகளிடம் விதைக்கிறார் அந்த நோக்கத்துடன் பல சந்திப்புகளை தமிழ் நாட்டில் மிலிந்த மொகொகட நடத்தியுமுள்ளார்.
இப் பின்புலத்திலேதான் இந்திய நலன்களுக்கு ஏற்ப பிறிக்ஸ் அமைப்பின் கொள்கையுடன் சேர்ந்து பயணிக்கும்போது லாபம் கிடைக்கும் என ரணில் கணக்குப் போட்டிருப்பார். ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியாவும் பதின்மூன்று பற்றி அதிகளவு அழுத்தம் கொடுக்காமல் இருக்க வேண்டுமானால் இலங்கையில் இந்தியா எதிர்பார்க்கும் புவிசார் பொருளாதார நலன்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதற்கேற்பவே தமிழர் தாயகப் பகுதிகளில் அதாவது வடக்குக் கிழக்கில் இந்திய முதலீடுகளுக்கு வசதியான பல ஒப்பந்தங்களில் இலங்கை , இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது. இதற்காவே ரணில் கடந்த வாரம் புதுடில்லிக்குச் சென்றிருக்கிறார்.
இலங்கையிடமிருந்து மேலும் பல நலன்களை இந்தியா எதிர்பார்ப்பதால் இலங்கையைச் சீனாவின் பக்கம் முழுமையாகச் செல்வதை புதுடில்லி தடுக்கும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. இராஜதந்திர ரீதியாகப் பல விடயங்களில் இலங்கை, இந்தியாவின் முகத்தில் கரிபூசியிருந்தாலும் இந்தியா, இலங்கையோடு பணிந்துதான் சில நகர்வுகளை முன்னெடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
குறிப்பாக, ஈழத்தமிழர் விவகாரத்தை உரத்துப் பேசினால், இலங்கை நேரடியாகவே சீனாவிடம் அல்லது அமெரிக்காவிடம் சென்றுவிடும். இந்த இரு நாடுகளிலும் ஏதேனும் ஒன்றிடம் இலங்கை நேரடியாகவும் முழுமையாகவும் தஞ்சமடைந்துவிட்டால் இந்தியாவிற்கு அது ஆபத்து என்பதை புதுடில்லி அறியும்.
இதனைத் தெரிந்தே ரணில் கன கச்சிதமாகச் சிங்களத் தேசிய அரசியலை நகர்த்துகிறார்.
பிறிக்ஸ் மாநாடும் அது தொடர்பான போட்டிகளும் இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளுக்கு அதாவது சீனாவும் இந்தியாவும் கையாள விரும்பும் தெற்காசியாவின் சில சிறிய நாடுகளுக்குப் பல வழிகளிலும் சாதகமாகவே அமையும் என்பது வெளிப்படை.
குறிப்பாக சீன - இந்திய அரசுகளின் நிழல்களில் இலங்கை முழுமையாகக் குளிர்காயும் என்பது பகிரங்கம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |