இலங்கைக்கு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம்
இலங்கைக்கு இந்த ஆண்டு அதிக கடன் வழங்கியதில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசிய அபிவிருத்தி வங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் 'வெரிட் ரிசர்ச்' என்ற ஆய்வு அமைப்பு முன்னெடுத்த ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு உலக நாடுகளும், அமைப்புகளும் கடன் உதவி வழங்கி வருகின்றன.
முதல் நான்கு மாதங்களில் 968 மில்லியன் டொலர் கடன்
இலங்கைக்கு இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடன் உதவி வழங்கி வருகின்றன. இதன்படி, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை 968 மில்லியன் டொலர் வெளிநாட்டு கடன் பெற்றுள்ளதாகவும், இதில் இந்தியா 377 மில்லியன் டொலர் வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய அபிவிருத்தி வங்கி 360 மில்லியன் டொலர் கடன் வழங்கி இருப்பதாக அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது.
எனினும், இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் உதவி வழங்க இந்தியா மறுப்பு
இதேவேளை, இலங்கைக்கு சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா நிதியுதவியாக வழங்கியுள்ளதாகவும் தொடர்ந்தும் புதிய நிதியுதவியை வழங்கும் திட்டம் இல்லை எனவும் இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியா, இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாகவும், நாடு என்ற வகையில் இப்படியான உதவியை தொடர்ந்தும் வழங்க முடியாது என இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.