இலங்கை விவகாரத்தில் அடிப்படை இராஜதந்திர பொறிமுறைகளை மீறுகிறீர்கள்! சீனாவை எச்சரிக்கிறது இந்தியா
இலங்கைக்கான சீனத் தூதுவர் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.
சீனத் தூதுவர் Qi Zhenhong இலங்கையின் அண்டை நாடுகளை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்தியாவின் எதிர்வினை கருத்துகள் வெளியாகியுள்ளன.
“சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம் என்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம்.
இலங்கைக்கு ஆதரவு தேவையாக உள்ளது
விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும்.
தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சிநிரல்களே, குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகவும் பாரிய சவாலாக உள்ளன. அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
