கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை - இந்தியா எடுத்துள்ள தீர்மானம்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து "ஒருமித்த ஆதரவு" இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் வி.முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இந்தியாவின் பங்கு குறித்து நேர்மறையான சூழ்நிலையில் ஒரு நல்ல விவாதம் நடைபெற்றதாக ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "இந்த கடினமான நேரத்தில் நமது அண்டை நாட்டுடன் நிற்பதன் அவசியத்திற்கு ஒருமித்த ஆதரவு," இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த கூட்டத்தில் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி, திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Chaired a Parliamentary Consultative Committee meeting on the situation in Sri Lanka.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 18, 2022
A good discussion held in a positive atmosphere on various issues and India’s role.
Unanimous support on the need to stand with our neighbor in this difficult time. pic.twitter.com/MG46ijpXw9
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்திய இலங்கை
உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு நாடு முழுவதும் கடுமையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது.
இலங்கை 2026ம் ஆண்டுக்குள் சுமார் 25 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. கடுமையான வெளிநாட்டு நாணய நெருக்கடியால், இந்த ஆண்டுக்கான சுமார் 7 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக ஏப்ரல் மாதம் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.
இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன் 51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.