கடுமையான பங்குச்சரிவை சந்தித்துள்ள இந்தியாவின் அதானி குழுமம்
ஹிண்டன்பேர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம், நேற்று மும்பாயில் மிகக் கடுமையான பங்கு சரிவைச் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்றைய வர்த்தக முடிவில் அதானி குழுமத்திற்கு 2.4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 20,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தை ஒழுங்குமுறை
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பேர்க் நிறுவனம், அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், 'அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை சபையான செபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பங்குகளை வைத்திருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.
மொரீசியஸ் மற்றும் பெர்முடா நாடுகளில் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்திலேயே செபியின் தலைவர் மாதபியும், அவரது கணவரும் பங்குகள் வைத்திருந்தனர் எனக் குற்றம் சாட்டியது.
இதன் காரணமாகவே அதானியின் சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுகள்
இதன் காரணமாகவே அதானி குழுமம் பங்கு பாரிய சரிவை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதானி குழுமம், ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை என மறுத்துள்ளது.
அதேபோல், செபியின் தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் வெளியிட்ட அறிக்கையில், 'ஹிண்டன்பேர்க்கின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
தங்களுடைய வாழ்க்கையும், நிதி பரிமாற்றங்களும் திறந்த புத்தகம்போல வெளிப்படையானவை என்று அவர்கள் குறிப்பி;ட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |