இந்தியாவின் பணக்கார மற்றும் வறுமையான முதலமைச்சர்கள் பட்டியல் வெளியானது
இந்தியாவில் மிகவும் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடத்தில் உள்ளார்.
மிகவும் வறுமையான முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தரப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியன இணைந்து, இந்தியாவின் முதலமைச்சர்களின் பொருளாதார நிலையை தரப்படுத்தியுள்ளன.
31 மாநிலங்களின் முதலமைச்சர்கள், தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை ஒருங்கிணைத்து, பணக்கார முதல்வர்கள், மற்றும் வறுமையான முதல்வர்கள் பட்டியலை இந்த அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன.
பொருளாதார நிலை
இதன்படி, இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து 1,630 கோடி ரூபாய்களாகும்.
அந்தவகையில், ஒரு முதலமைச்சரின் சராசரி வருமானம் 13,64,310 ரூபாய் ஆகும், இது இந்தியாவின் சராசரி தனி ஆள் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகமாகும்.
இந்தநிலையில், 31 முதல்வர்களில், 2 பேர் பில்லியனர்களாக உள்ளனர்.
அதாவது அவர்கள் 100 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார முதலமைச்சராக ஆந்திரா முதல்வர்சந்திரபாபு நாயுடு தரப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடம் 931 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவிடம் 332 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன.
கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் சித்தராமயாவிடம் 51 கோடி ரூபாய் சொத்து உள்ளது
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி 38 கோடி ரூபாய் சொத்துகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் 14-வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு 8 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் முதல்வர் ஸ்டாலினுக்கு எந்தக் கடனும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி 15 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் வறுமை முதல்வர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
வழக்குகள்
ஜம்மு-காஸ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா 55 லட்சம் சொத்து மதிப்புடன் ஏழை முதல்வர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
குற்றவியல் வழக்குகளை கொண்ட முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிக வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
இவர் மீது 89 வழக்குகள் உள்ளன. இதில் 72 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய குற்ற வழக்குகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மீது 47 வழக்குகள் உள்ளன. இதில் 11 வழக்குகள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழான தண்டனைக்குரிய வழக்குகளாக உள்ளன.