இந்தியாவில் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து: 13 பேர் பலி (Video)
இந்தியா- மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள ஆலயத்தின் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் இன்றைய தினம் (30.03.2023) நடைபெற்றுள்ளது.
பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக திடீரென மளமளவெனச் சரிந்து கீழே விழுந்துள்ளது.
19 பேர் உயிருடன் மீட்பு
இந்த அனர்த்தத்தில் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர்.
இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களில் 19 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
இச்சம்பவத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் (Shivraj Singh Chouhan) இரங்கல் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முழு மருத்துவச் செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி பிரார்த்தனை
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், “இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசி, நிலமையை தெரிந்து கொண்டேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
#WATCH | Madhya Pradesh: Many feared being trapped after a stepwell at a temple collapsed in Patel Nagar area in Indore.
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 30, 2023
Details awaited. pic.twitter.com/qfs69VrGa9