இந்தியாவில் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள்: சூடுபிடிக்கும் இந்திய தேர்தல் களம்
இந்தியாவில் இடம்பெற்று வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணிக்கு(I.N.D.I.A) வெற்றி வாய்ப்புக்கள் உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, இந்தியா கூட்டணியின் தலைவர்கள் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 280 முதல் 290 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதில் காங்கிரஸ் கட்சி தனித்தே 120 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் என்றும் பிந்திய கருத்துக்கணிப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இதுவே ஜூன் முதலாம் திகதியன்று நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்துக்கான காரணம் என்று இந்திய முன்னணி ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரதீய ஜனதா கட்சி
பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் 370 முதல் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அந்தக்கட்சி பிரசாரம் செய்து வருகிறது.
எனினும் வடமாநிலங்களில் தற்போது இந்தியா கூட்டணிக்கு வாய்ப்பாக தேர்தல் களம் மாறியிருப்பதால் பாரதீய ஜனதா கட்சி 260 முதல் 280 தொகுதிகளிலேயே வெற்றி பெறும் என்று பிந்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் புதிய ஆட்சி அமைப்பதற்கான முன் நகர்வுகளை மேற்கொள்ள ஜூன் முதலாம் திகதி இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |