காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை தொடர்பில் இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம்: கனெடிய எம்.பி உறுதி
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடா்பு உள்ளதற்கு வலுவான ஆதாரம் உள்ளது என புதிய ஜனநாயகக் கட்சித் தலைவரும், கனடா சீக்கிய எம்.பி.யுமான ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
நிஜ்ஜார் கொலை தொடா்பாக இந்தியா மீது கனடா அதிபா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு ஆதரவு அளித்து வரும் ஜக்மீத் சிங் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.
கனடா அரசுக்கு கிடைத்த உளவுத் தகவல்கள் அடிப்படையில்தான் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. நிஜ்ஜாார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடா்பு உள்ளது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
எனவேதான் கனடா அரசும் இது தொடா்பாக முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.
இந்த விடயத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக உள்ளது. எனவே, நாங்கள் கனடா அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுப்போம். கனடாவில் நீண்ட காலமாகவே இந்திய அரசால் சீக்கிய மக்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.
இந்தியா மீது அதிருப்தி
கனடாவில் உள்ள சீக்கியர்கள் மட்டுமல்லாது இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட பிற மக்களும் இந்த விடயத்தில் இந்தியா மீது அதிருப்தியாகவே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
ஜக்மீத் சிங்கின் கட்சி கனடா நாடாளுமன்ற கீழவையில் 4-ஆவது பெரிய கட்சியாகும். அக்கட்சிக்கு அவையில் 25 உறுப்பினா்கள் உள்ளனர். கனடா பேரவையில் பெரும்பான்மைக்கு 170 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 158 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
ஜக்மீத் சிங் கட்சியின் ஆதரவுடன்தான் ட்ரூடோ பிரதமா் பதவியைத் தக்கவைத்து வருகிறார்.
கனடாவில் மதகட்டமைப்புரீதியிலும், பொருளாதார ரீதியாக வலுவாக உள்ள சீக்கியா்கள் முக்கிய அரசியல் கட்சிகளிலும் இடம் பெற்று அங்கு ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வகித்து வருகின்றனர். எனவேதான், அங்கு செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளை அடக்க கனடா அரசு தயங்குகிறது என்ற கருத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.