இலங்கையின் அபிவிருத்திக்காக கூட்டாக இணையும் நாடுகள்:முதலீடு தொடர்பில் கலந்துரையாடல்
இந்தியாவும் இஸ்ரேலும் இலங்கையின் விவசாய துறையின் அபிவிருத்திக்காக கூட்டாக முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் விவசாய மையங்களை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
பயிர்ச்செய்கை
இதற்கமைய ஹொரணை, சீதா-எலிய, மஹில்லுப்பல்லம, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் கன்னோருவ ஆகிய இடங்களை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக விவசாய அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
இந்த நிலங்களில் பழங்கள் உருளைக்கிழங்கு, நெல் அல்லாத தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் பயிர்களை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றை அமைக்க திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்கான பேச்சுவார்த்தை
இந்தநிலையில் தேவை சார்ந்த இலக்குகள், பங்குதாரர்கள், பொறுப்புகள் மற்றும் மையங்களை நிறுவுவதற்கான காலக்கெடு ஆகியவற்றைக் கண்டறிவதற்காக, புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துடன் நேரடி உரையாடலை ஆரம்பிக்குமாறு, இலங்கையின் விவசாய அமைச்சு, புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த முன்னோடி திட்டம் தொடர்பாக இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் பரஸ்பரம் தொடர்பு கொண்டுள்ளனர்.